சென்னை: “எனக்கு எதிராக கறை படிந்த கரங்களுடன் ஆர்.எஸ்.பாரதி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்” என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை டெல்லி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். பின்னர் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், ஜாபர் சாதிக்கை திமுகவுடன் தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகக் கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கோரி பழனிசாமிக்கு எதிராக திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.