சென்னை: சென்னை, ஆழ்வார்பேட்டை, நாரதகான சபாவில் நடைபெற்ற நாடகப்பிரியா குழுவின் 50ம் ஆண்டு விழா, நாடகப்பிரியா நிறுவனத் தலைவர் எஸ்.வி.வெங்கட்ராமன் நூற்றாண்டு விழா மற்றும் நாடகப்பிரியாவின் 7000வது நாடக விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: கலைஞரிடமும் என்னிடமும் அளவு கடந்த பாசமுடையவர் எஸ்.வி.சேகர். பாசம் என்றால், அது அரசியல் பாசம் அல்ல; கலைப் பாசம். அதுதான் முக்கியம். இந்தக் கலைப் பாசம் காலத்தால் அழியாதது. அழிக்க முடியவே முடியாது. இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எஸ்.வி.சேகரும் எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர் தான். எங்கள் குடும்பம் என்றால் கலைக் குடும்பம். அவர் நடத்திய நாடகத்தின் தலைப்பு அதிர்ஷ்டக்காரன்.
இப்போது மூன்றாவது முறையாக விழா நடத்தி ஹாட்ரிக் அடித்த அதிர்ஷ்ட்க்காரன் அவர். அவருக்கு அதிர்ஷ்டத்தின் மேல் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ, அதைபோல என்னைப் பொறுத்தவரைக்கும் உழைப்பின் மீது எனக்கு நம்பிக்கை அதிகம் உண்டு. இன்று கலைஞர் நம்மோடு இல்லை என்றாலும், அவர் மீதான பாசவுணர்வோடு தான் இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன்; கருதுகிறேன். அதுதான் உறுதி. கட்சிகள் மாறும்போது, கொடிகளின் நிறம் மாறலாம்; ஆனால் மனிதருடைய நிறங்கள் மாறக்கூடாது, அதற்கு உதாரணமாக நம்முடைய எஸ்.வி.சேகரை தைரியமாக நாம் சொல்லமுடியும்.
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், எந்தக் கட்சியில் அவர் இருந்தாலும், துணிச்சலாக எதையும் எடுத்துச் சொல்லக்கூடிய, விமர்சனம் செய்யக்கூடிய ஆற்றல் அவருக்குண்டு. இதையெல்லாம் பார்க்கின்றபோது, 2026 தேர்தலுக்கு இவரை பயன்படுத்திக் கொண்டால் போதும். வேறு ஒன்றும் தேவையில்லை. இன்றைக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தான் சார்ந்திருக்கக்கூடிய கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், துணிச்சலோடு விமர்சனம் செய்கின்ற ஆற்றல் அவருக்குத்தான் உண்டு. அதைத் தொடர்ந்து இன்றைக்கு சோசியல் மீடியாவில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அவர் தந்தை வாழ்ந்த மயிலாப்பூர் பகுதியில் இருக்கக்கூடிய தெருவிற்கு அவருடைய தந்தையாரின் பெயரை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நிச்சயமாக அந்தப் பெயர் விரைவில் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, விரைவில் சூட்டப்படும், சூட்டப்படும். நீங்கள் வைத்த கோரிக்கையை நான் நிறைவேற்றி இருக்கிறேன். நான் ஏற்கனவே வைத்த கோரிக்கையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
The post எந்தக் கருத்தையும் துணிச்சலாக சொல்லக் கூடியவர் எஸ்.வி.சேகர் 2026 தேர்தலுக்கு அதை பயன்படுத்தினாலே போதும்: 50வது ஆண்டு நாடக விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.