சென்னை,
பஞ்சாபி மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் வாமிகா கபி. இவர் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'ஜப் வி மெட்' என்ற இந்தித் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, 'து மேரா 22 மெயின் தேரா 22' படத்தில் யோ யோ ஹனி சிங் மற்றும் அமரீந்தர் கில் ஆகியோருடன் சேர்ந்து நடித்ததன் மூலம் இவருக்கு பெரிய பெயர் கிடைத்தது.
தொடர்ந்து, 'இஷ்க் பிராண்டி' , 'நிக்கா ஜைல்டார் 2' , 'பராஹுனா', 'தில் தியான் கல்லன்' , 'நிக்கோ ஜைல்டார் 3' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'பேபி ஜான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படம் வருகிற 25-ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட வாமிகா கபி, பேபி ஜான் பட கிளைமாக்ஸ் காட்சி பற்றி பேசினார். இது குறித்து அவர் கூறுகையில்,
"பேபி ஜான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ரசிகர்கள் பார்க்கும் வரை என்னால் காத்திருக்கமுடியவில்லை. அதற்காக நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். ரசிகர்கள் எதிர்பாராததை அதில் எதிர்பார்க்கலாம். அது அவர்களை ஆச்சரியப்படுத்தும் என்று நினைக்கிறேன். ஒரு நடிகையாக நான் விரும்பும் அனைத்தும் அதில் உள்ளன' என்றார்.
பேபி ஜான் படம், தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.