சென்னை,
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் என்பது எதிர்பாராத வகையிலும் மனதில் பெரும் சுமையுடனும் எதிர்கொள்ள வேண்டிய களமாக அமைந்துவிட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்றவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவெரா திருமகன். அவருடைய அகால மரணத்தைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தையான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களம் கண்டு மாபெரும் வெற்றி பெற்றார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் நம் அனைவரின் அன்பிற்குரிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் மத்திய மந்திரி, தந்தை பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் அதிர்ச்சி தரத்தக்க மரணத்தால் இந்த இடைத்தேர்தல் களத்தைச் சந்திக்கின்றோம். இந்த முறை ஈரோடு கிழக்கில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட வேண்டும் என்று கழகத்தினர் விரும்பியது மட்டுமின்றி, அரசியல் சூழலை நன்குணர்ந்த தோழமைக் கட்சியான காங்கிரஸ் பேரியக்கமும் தீர்மானித்து அறிவித்ததைத் தொடர்ந்து, தி.மு.க.,வின் வேட்பாளராக ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களின் அன்பைப் பெற்ற வி.சி.சந்திரகுமார் களமிறங்கியுள்ளார்.
அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் தொகுதியின் ஒவ்வொரு வீடாகச் சென்று கழகத்தின் மூன்றரை ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். கழக அரசின் சாதனைத் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றிருப்பதால் தங்கள் வாக்குகள் உதயசூரியனுக்கே என்று ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் உறுதியளித்து வருகின்றனர்.
திமுக அரசின் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் கழக வேட்பாளருக்கு வழங்கும் மகத்தான ஆதரவு. இந்த அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும் ஆதரவையும் எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று நாளொரு அவதூறையும் பொழுதொரு பொய்யையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பினாலும் அவை மக்கள் மன்றத்தில் எடுபடுவதில்லை. பொழுது சாய்வதற்குள் எதிர்க்கட்சிகளின் பொய்களும் அவதூறுகளும் பொடிப் பொடியாகிவிடுகின்றன.
திமுக வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளன. திமுகவை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி சில உதிரிகளைத் தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பார்க்கின்றன. தமிழ்நாட்டின் நலனுக்காகப் பாடுபடுகிற திமுக அரசையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசையும் தமிழ்நாட்டு மக்கள் சரியாக அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள். அதனை ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு அளிக்கும் மகத்தான வெற்றியின் வாயிலாக நிரூபிப்பார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் மீதும், அங்கே தேர்தல் பணியாற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும் தோழமைக் கட்சியின் செயல்வீரர்கள் மீதும் உங்களில் ஒருவனான நான் வைத்திருக்கும் நம்பிக்கையினாலும், என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையினாலும், நான் நேரில் வந்து வாக்கு சேகரித்ததாகக் கருதி, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு வருகிற 5-ம் தேதியன்று உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்து மகத்தான வெற்றியை அளிக்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
நம்மை வழிநடத்தும் தலைவரும், நம் தலைவர்களுக்கெல்லாம் தலைவருமான பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறும் இடைத்தேர்தலில், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய தொடர் வெற்றி அமையட்டும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையில், 'வெல்வோம் 200 – படைப்போம்' வரலாறு என்பதற்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் மாபெரும் வெற்றியை எதிர்நோக்குகிறேன், உடன்பிறப்புகளின் உழைப்பினாலும், மக்கள் மீது உள்ள நம்பிக்கையினாலும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.