எண்ணூர் கொசஸ்தலை ஆற்று மணல் எடுத்துச்சென்ற லாரிகள் தடுத்து நிறுத்தம்: தாசில்தார் மடக்கி பிடித்து விசாரித்ததால் பரபரப்பு

3 weeks ago 4

திருவொற்றியூர்: கொசஸ்தலை ஆறு கடலில் கலக்கும் எண்ணூர் முகத்துவார பகுதியில் ரூ.150 கோடி மதிப்பில் தூர்வாரி சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதன்படி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆற்றை ஆழப்படுத்தி அதிலிருந்து எடுக்கப்படும் மணலை அதே பகுதியில் கரையோரம் மலைபோல் குவித்து வைத்துள்ளனர். இந்த ஆற்று மணல் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக லாரிகளில் எடுத்துச் செல்லப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த ஆற்று மணலை எடுத்து சென்ற 10க்கும் மேற்பட்ட லாரிகளை கத்திவாக்கம் சாலையில் மடக்கிய 2வது வார்டு கவுன்சிலர் கோமதி சந்தோஷ் மற்றும் பொதுமக்கள் மணலை எடுப்பதற்கு அனுமதி உள்ளதா என லாரி டிரைவர்களிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் எண்ணூர் காமராஜர் சாலையில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தகவலறிந்த திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி தலைமையில் அலுவலர்கள் எண்ணூர் பகுதிக்கு வந்து விசாரித்தனர். அப்போது நீர்வளத்துறையின் அனுமதியுடன் முகத்துவாரத்தில் எடுக்கும் மணலை பெருங்குடி பகுதிக்கு எடுத்து செல்வதாக லாரி டிரைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அதற்கான உத்தரவு ஆணையை காண்பிக்கும்படி நீர்வளத்துறை அதிகாரியிடம் தாசில்தார் கேட்டுள்ளார். அப்போது, சென்னை மாவட்ட கலெக்டர் மூலம் திருவொற்றியூர் வருவாய் துறைக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர். சரியான உத்தரவையும், பெருங்குடியில் மணல் கொட்டப்படும் புகைப்படத்தையும் எடுத்து வந்து நேரில் காண்பிக்கும்படி கூறிய தாசில்தார், லாரியின் பதிவு எண்களை குறித்து கொண்டு அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆற்றிலிருந்து தூர்வாரப்பட்ட மணல் கரை ஓரத்தில் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருப்பதால் இந்த மணல் பருவ மழையின் போது மீண்டும் கரைந்து ஆற்றிலே போய்விடும் என துணை முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில் மணல் இங்கிருந்து எடுக்கப்பட்டு கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி ஆகிய பகுதிகளில் தாழ்வாக உள்ள அரசு நிலங்களில் நிரப்பப்படுகிறது. இந்த மணல் எடுப்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் முறையான அனுமதியும் பெறப்பட்டுள்ளது’’ என்றனர்.

The post எண்ணூர் கொசஸ்தலை ஆற்று மணல் எடுத்துச்சென்ற லாரிகள் தடுத்து நிறுத்தம்: தாசில்தார் மடக்கி பிடித்து விசாரித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article