எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு: 15ம் தேதி ஒத்திவைப்பு

3 weeks ago 9

பெங்களூரு,

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். அதில், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை தனது 16 வயது மகளுடன் நேரில் சந்தித்து உதவி கேட்டபோது, தனது மகளை அவர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இது தொடர்பாக எடியூரப்பா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் எடியூரப்பா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனிடையே எடியூரப்பா மீது புகார் அளித்த பெண் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள போக்சோ வழக்கை ரத்து செய்யகோரி எடியூரப்பா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நேற்று கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எடியூரப்பா தரப்பு வழக்கறிஞர், மனுதாரர் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை ஏற்க முடியாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Read Entire Article