கோவை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவனின் சம்பந்தி வீடு உட்பட பல இடங்களில் கோவையில் ஐடி ரெய்டு நடந்தது. இதில் ரூ. 42 கோடி ரொக்கம் மற்றும் 100 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது அதிமுகவினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி பின்னர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் எப்போது வேண்டுமானாலும் சோதனையை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கவர்னர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்கினார். மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில், திடீரென்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருக்கமான நண்பர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் நண்பர் இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்ரமணியம் கோவையில் வசிக்கிறார்.
அஸ்வின் பேப்பர் மில்ஸ் அதிபரான இவரது அலுவலகம், கோவை சிவானந்தா காலனியில் உள்ளது. இங்கு கடந்த 22ம் தேதி முதல் 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் இருந்து வந்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கோவை அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில், வரி ஏய்ப்பு செய்துள்ளனரா, முறையாக வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதா என ஆவணங்கள் மற்றும் கணினியை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இரவு, பகலாக தொடர்ந்த இந்த சோதனை 5 நாட்கள் நடந்து, கடந்த 26ம் தேதி நள்ளிரவு நிறைவடைந்தது.
இதுதவிர, கோவையை சேர்ந்த லட்சுமி டூல்ஸ் நிறுவன உரிமையாளர் வரதராஜன், அவரது மகன்கள் பொன்னுத்துரை, பார்த்திபன், செந்தில்குமார் ஆகியோர் நடத்தி வரும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வரதராஜன் தொடர்புடைய இடங்களான துடியலூர், ராவுத்தர் பிரிவு, செலக்கரிச்சல், கவுண்டம்பாளையம், பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, சிந்தாமணிபுதூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையும் 5 நாட்களில் நிறைவடைந்தது. கோவையில் இருவருக்கும் சொந்தமான பல இடங்களில் கடந்த 5 நாட்கள் நடந்த சோதனையில் கோடிக்கணக்கில் பணம், ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் சோதனையின் முழு விவரத்தை வருமானத்துறையினர் வெளியிடாமல் ரகசியமாக முடித்து சென்றிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாரிகள் அதன் தகவல்களை வெளியிட்டனர்.
அதன்படி கோவையில் நடந்த ரெய்டில் ரூ.42 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.100 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எடப்பாடி நண்பர் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கல்லூரிகளிலும் வருமான வரி சோதனை நடந்தது. அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் பிடிபட்ட பணம் யாருடையது, அதிமுகவினரின் பினாமி பணமாக இருக்கலாமா என்ற கோணத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதேபோல சில அதிமுக பிரமுகர்கள், வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் புகாரின் பேரில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவன் உறவினரிடம் ரூ.42 கோடி பறிமுதல்: ரூ.100 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.