எடப்பாடி அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்த நிலையில் செங்கோட்டையன் அவசரமாக டெல்லி பயணம்: அதிமுக கட்சியை உடைக்க பாஜக திட்டமா?

2 days ago 2

சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 25ம் தேதி திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இந்த பயணம் குறித்து அதிமுக தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. டெல்லியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை பார்வையிட வந்துள்ளதாக டெல்லியில் உள்ள நிருபர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். எடப்பாடி திடீரென பயணம் மேற்கொண்டது தமிழக அரசியலில் திடீர் கவனம் பெற்றது. ஏனெனில் 2026ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு அதிமுக புதிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எடப்பாடி கூறி வந்தார்.

அதேநேரம், பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, மீண்டும் அதிமுக – பாஜ கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி முக்கியமாக இடம் பெற்று வந்தது. அப்போது, பத்திரிகையாளர்களிடமே கோபப்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி, ‘பாஜவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக பொதுக்குழுவில் எடுத்த முடிவுபடி இனி எக்காரணத்தை கொண்டும் அதிமுக – பாஜ கூட்டணி கிடையாது’ என்பதை உறுதியாக கூறி வந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. யாருக்கும் தெரியாமல் சந்திக்க முடிவு செய்து, மூன்று கார்களில் மாறி மாறி ஏறி சென்றார். இதை பத்திரிகையாளர்கள் கண்டுபிடித்து செய்தியாக வெளியிட்டனர். அதன்படி ஒருவழியாக கடந்த 25ம் தேதி எடப்பாடி – அமித்ஷா சந்தித்து நடந்து முடிந்தது.

இதனால் 2026ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி விட்டதாக கூறப்பட்டது. இதனை இபிஎஸ் ஆமோதிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. சேலத்தில் அண்மையில் இபிஎஸ் அளித்த பேட்டியொன்றில் பாஜகவுடன் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு, ‘எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை தேர்தல் நெருங்கும்போது நாங்களே சொல்லுவோம்’ என்று கூறியிருந்தார். எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு சென்னை திரும்பியதையடுத்து, மறுநாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். அவருடன் தமிழக பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரனும் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் தொடர்ந்து 2 நாட்கள் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.

அவர்கள் அமித்ஷாவை சந்தித்து பேசுவார்கள் என்றும், அப்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணி குறித்து பேச உள்ளனர். அதேநேரம் பிரிந்து சென்ற அதிமுக தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று டெல்லி தலைமையிடம் வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த உறுப்பினருமான செங்கோட்டையன் நேற்று அவசரமாக திருச்சியில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லி சென்ற அவர், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு முடிந்ததும், செங்கோட்டையன் நேற்று இரவே தமிழகம் திரும்பி வந்துவிட்டார்.

செங்கோட்டையன் அவசரமாக டெல்லி சென்று திரும்பியதும், அங்கு பாஜ மூத்த தலைவர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியது முக்கியமாக பார்க்கப்படுகிறது. காரணம், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றபோது, நேரடியாக சில விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. டெல்லி பாஜக தலைவர்களும், அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்தபோது மூத்த அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியலை வைத்து மிரட்டி பணிய வைக்க முயற்சி செய்தது. இதையடுத்து எடப்பாடி, தமிழக பாஜவுடன் கூட்டணி வைக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆனாலும், தமிழகம் வந்த பிறகு கடந்த 2 நாட்களாக எடப்பாடி நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றே கூறப்படுகிறது. இதையடுத்து, சமீபகாலமாக எடப்பாடியுடன் மோதல் போக்கை தொடர்ந்துள்ள செங்கோட்டையனை டெல்லி பாஜக தலைவர்கள் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். காரணம், எடப்பாடிக்கு இணையான தலைவர் செங்கோட்டையன். அவருக்கு கட்சியில் நல்ல செல்வாக்கு உள்ளது.

அதேநேரம் அதிமுக தலைவர்கள் மற்றும் பாஜக உள்ளிட்ட மாற்றுக்கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் நல்ல தொடர்பில் இருப்பவர். அதனால், எடப்பாடி பழனிசாமி பாஜக வழிக்கு வராவிட்டால், செங்கோட்டையன் மூலமாக அதிமுக கட்சியை உடைத்து, தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணியை எப்படியாவது கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே, நேற்று டெல்லியில் நிர்மலா சீதாராமன் மூலம் செங்கோட்டையனிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. செங்கோட்டையன் டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்து இன்று எடப்பாடியிடம் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார். டெல்லி பாஜக தலைவர்கள் தமிழகத்தில் அதிமுக தலைவர்களை டெல்லிக்கு அழைத்து பேசி, கூட்டணி குறித்து நெருக்கடி கொடுப்பதால் அதிமுக தொண்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

The post எடப்பாடி அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்த நிலையில் செங்கோட்டையன் அவசரமாக டெல்லி பயணம்: அதிமுக கட்சியை உடைக்க பாஜக திட்டமா? appeared first on Dinakaran.

Read Entire Article