தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடத்தில் அங்கு 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது. மியான்மரின் சாகாயிங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவிலும், 10 கி.மீ ஆழத்திலும் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 4 முறை லேசான அதிர்வுகள் ஏற்பட்டன. அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதால், மியான்மரின் மண்டலே நகர் உள்பட பல்வேறு பகுதிகள் நொறுங்கிப் போயுள்ளன. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பல பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், பாதிப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
தற்போதைய சூழலில் மியான்மரின் 50 சதவீத பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்த பகுதிகளே நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் 1,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 5,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘மியான்மரை புரட்டி போட்ட நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 முதல் 1,00,000 வரை இருக்க வாய்ப்புள்ளது. மியான்மரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 70 சதவீதம் வரை சரியும் என தெரிகிறது.
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள தாய்லாந்து, மலேசியா, வங்கதேசம், லாவோஸ், சீனா மட்டுமின்றி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதை அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் புவியியல் ஆய்வு அமைப்புகள் உறுதி செய்தன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், மியான்மரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவு 300க்கும் மேற்பட்ட அணுகுண்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை போலுள்ளது என கூறியுள்ளது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மீட்பு பணிகளை மேற்கொள்ளும் அளவுக்கு மியான்மர் தயார் நிலையில் இல்லை. இதனால் அங்கு அவசரநிலை அறிவித்துள்ள ராணுவத் தலைவர் மின் அனுக் லாய்ங், சர்வதேச நாடுகளின் உதவியையும் நாடியுள்ளார். உலகில் எந்த நாடு பாதிக்கப்பட்டாலும் முதலாவதாக உதவிக்கரம் நீட்டும் இந்தியாவிலிருந்து ‘ஆபரேசன் பிரம்மா’ பெயரில் விமானப்படையின் இரண்டு சி 17 ரக விமானங்களில் 60 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய ராணுவ மருத்துவமனை குழுவினர் 118 பேரும் அவற்றில் புறப்பட்டுச் சென்றடைந்துள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுதவிர ரஷ்யா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் நிவாரணப் பொருட்கள் மற்றும் பணியாளர்களை விமானங்கள் மூலம் அனுப்பி உள்ளன. அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏஷியான் ஆகியவை மியான்மருக்கு உதவ உறுதியளித்துள்ளன.
வரும் நாட்களில் இதைவிட பெரிய நிலநடுக்கம் ஏற்படுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். தாய்லாந்து நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் இல்லாததால் பாங்காங்கில் உள்ள கட்டடங்கள் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களை தாங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டவை அல்ல. இதனால் தற்போதைய அதிர்வுகளால் கட்டமைப்புக்கு ஏற்படும் பாதிப்பு தீவிரமானதாக இருக்கலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது இந்தியா ேபான்ற நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணி என்றால் மிகையல்ல.
The post எச்சரிக்கை மணி appeared first on Dinakaran.