
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 224 ரன் எடுத்தது. குஜராத் தரப்பில் சுப்மன் கில் 76 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 225 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 38 ரன் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அபிஷேக் சர்மா 74 ரன் எடுத்தார்.
இதையடுத்து இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த போட்டியில் நாங்கள் தோல்வியடைய இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று எங்கள் பேட்டிங் பவர்பிளே அவ்வளவு சிறப்பாக இல்லை. மற்றொன்று நான் மற்றவர்களைப் போல சரியாக செயல்படவில்லை. ஏனெனில் நான் விட்ட கேட்சுகளின் காரணமாக அவர்கள் கூடுதலாக 20-30 ரன்கள் எடுத்தனர்.
அதனால் என்னுடைய தவறின் காரணமாக அவர்களை அதிக ரன்களை அடிக்க விட்டுவிட்டோம். அதன்பின் இந்த மைதானத்தில் 200 ரன்களைத் துரத்துவது கொஞ்சம் யதார்த்தமாகத் தெரிந்தது. அவர்கள் தரமான பேட்டர்கள். அவர்கள் விசித்திரமாக எதுவும் செய்ய மாட்டார்கள். நாம் மோசமான பந்துகளை வீசும் போது அவர்கள் அதனை பவுண்டரிகளுக்கு அடிக்கின்றனர்.
இது உண்மையிலேயே இது ஒரு நல்ல விக்கெட். அபிஷேக் சர்மா நன்றாக பேட் செய்தார். இறுதியில் நிதிஷ் குமாரும் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், நாங்கள் கொஞ்சம் தாமதமாக ஆடிவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.