எங்களுக்கு நீதி வேண்டும்; இழப்பீடு வேண்டாம்: பெண் டாக்டரின் தந்தை

3 hours ago 2

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பணியில் இருந்த முதுநிலை பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவர் அடுத்த நாள் (10-ந்தேதி) கைது செய்யப்பட்டார். மாநில போலீசார் அவரை கைது செய்தனர்.

எனினும் இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு கடந்த ஆகஸ்டு 13-ந்தேதி உத்தரவிட்டது. இதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து 14-ந்தேதி முதல் விசாரணையை தொடங்கினர். மறுபுறம் இந்த விவகாரத்தில், தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டும், மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க சிறப்புக்குழு ஒன்றை நியமித்தது.

பணியில் இருந்த பெண் டாக்டர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த கொடூர செயலை கண்டித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ சங்கங்கள் போராட்டங்கள் நடத்தின. குறிப்பாக மேற்கு வங்காளத்தில் போராட்டம், பேரணி, உண்ணாவிரதம் என பல வாரங்களாக போராட்டம் நீடித்தது.

பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும், பள்ளி-கல்லூரி மாணவர்களும் மேற்கு வங்காளத்தில் தீவிர போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையே இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு சியல்டா மாவட்ட கூடுதல் மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை அனைத்தும் கடந்த 9-ந்தேதி நிறைவடைந்தது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என கடந்த 18-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனையடுத்து, நீதிபதி அனிர்பன் தாஸ் இன்று வழங்கிய தீர்ப்பில், பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் வழங்கவேண்டும் என மேற்கு வங்காள வங்காள அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், பெண் டாக்டரின் தந்தை செய்தியாளர்களிடம் பேசும்போது, சி.பி.ஐ. தாக்கல் செய்த சான்றுகளின் அடிப்படையில் நல்லதொரு தீர்ப்பு அமையும் என கோர்ட்டு நினைக்கிறது. அந்த தீர்ப்பை கோர்ட்டு வழங்கியுள்ளது.

எங்களுக்கு சி.பி.ஐ. மேற்கொண்ட விசாரணையில் நிறைய கேள்விகள் உள்ளன. நாங்கள் இழப்பீடுக்காக கோர்ட்டுக்கு போகமாட்டோம். எங்களுக்கு நீதி வேண்டும். இழப்பீடு வேண்டாம். கொல்கத்தா போலீசார் தவறு இழைத்துள்ளனர்.

சி.பி.ஐ. இன்னும் சில விசயங்களை செய்ய வேண்டும் என்றார். அவருடைய மகள் உயிரிழப்பை விட அதிக வலியை கொல்கத்தா போலீசார் ஏற்படுத்தி இருந்தனர் என்றும் கூறியுள்ளார்.

Read Entire Article