எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்.. 3 நபர்கள் வெறிச்செயல்

3 months ago 22

எட்டாவா:

உத்தர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது நிரம்பிய இளம்பெண், நேற்று முன்தினம் மத்திய பிரதேசத்தின் பிண்ட் மாவட்டத்தில் உள்ள தனது தாய் மாமா வீட்டில் இருந்து சொந்த ஊருக்கு கோட்டா-எட்டாவா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்துள்ளார். அப்போது அதே பெட்டியில் பயணித்த ஒரு நபர் அந்த பெண்ணை தவறான நோக்கத்துடன் பார்த்துள்ளார். தனது செல்போனில் அந்த பெண்ணை வீடியோ எடுத்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண், எழுந்து சென்று வேறு பெட்டிக்கு சென்றுள்ளார். அத்துடன், அந்த நபரை தனது செல்போனில் புகைப்படமும் எடுத்துள்ளார். ஆனாலும் விடாமல் பின்தொடர்ந்து சென்ற அந்த நபர், மயக்க மருந்து மூலம் பெண்ணை மயக்கமடைய செய்து கடத்தி சென்றுள்ளார்.

பின்னர் அந்த நபர் மற்றும் வேறு 2 நபர்கள் சேர்ந்து சுமார் 5 மணி நேரம் அந்த பெண்ணை தங்கள் கட்டுப்பாட்டில் பிணைக் கைதியாக வைத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து பார்த்தபோது, அந்த பெண் தன்னைச் சுற்றி 3 ஆண்கள் இருந்ததையும், அவர்கள் தன்னை பலாத்காரம் செய்ததையும் உணர்ந்தார். அதன்பின் அந்த பெண்ணை உஜியானி கிராமம் அருகே நெடுஞ்சாலையில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

உள்ளூர் மக்கள் அந்த பெண்ணுக்கு உதவி செய்து, அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் உள்ளூர் பேக்வர் காவல் நிலையத்தில் ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அரசு ரெயில்வே காவல்துறைக்கு வழக்கு மாற்றப்பட்டது. குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின்கீழ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Read Entire Article