தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல் மற்றும் தீயணைப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். முதல்வர் பதில் அளித்து முடிந்த பிறகு பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வாய்ப்பு கேட்டார். அப்போது சபாநாயகர் உடனே வாய்ப்பு கொடுக்கவில்லை. அடுத்த நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டே இருந்தார். இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று உதயகுமாருக்கு பேச வாய்ப்பு கொடுங்கள் என்று உரக்க கூச்சலிட்டனர். அமளியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, அவை முன்னர் துரைமுருகன் பரிந்துரையின்படி, ஆர்.பி.உதயகுமாருக்கு சபாநாயகர் பேச வாய்ப்பு வழங்கினார். அப்போது பேசிய ஆர்.பி.உதயக்குமார், முதல்வர் அரசின் சாதனைகள், துறை சார்ந்த சாதனைகளை எடுத்து சொன்னார். அரசு நிர்வாகம் தலை நிமிர்ந்து நிற்குதா? தலை குனிந்து நிற்கிறதா? என்பதை மக்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு பதில் அளித்து சபாநாயகர் கூறும்போது, மக்கள் தீர்ப்பளித்து தான் இங்கே உட்கார்ந்து இருக்கிறார்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய, எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார், எப்போதுமே தமிழ்நாட்டில் பார்ட்-2 படங்கள் பெயிலியர் ஆகியுள்ளது. இந்தியன் பார்ட்-2 கூட பெயிலியர்தான். கடந்த ஆட்சி ஊர்ந்து சென்றது என முதல்வர் கூறியுள்ளார். அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நான் எதார்த்தமாகத்தான் குறிப்பிட்டேன்.
உங்கள் மனதில் உறுத்தினால் சொல்லுங்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கலாம். ஊர்ந்து என்பதற்கு பதிலாக தவழ்ந்து என போட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். ஊர்ந்து என்பது அன் பார்லிமெண்ட வார்த்தை அல்ல தேவையென்றால் ‘தவழ்ந்து’ என்று மாற்றிக் கொள்ளுங்கள் என்றார். நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும் தெரிவித்தார். நீங்கள் ஊர்ந்து, தவழ்ந்து என்று என்ன வார்த்தை என்றாலும் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
The post ஊர்ந்து, தவழ்ந்து என்று முதல்வர் விமர்சனம் சட்டப்பேரவையில் அதிமுக கடும் அமளி appeared first on Dinakaran.