வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவை பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் கூட்டமாகவும், தனியாகவும் சுற்றித்திரிகின்றன. இவற்றை கட்டுப்படுத்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் நவீன கருவிகளை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதனால் காட்டுயானைகள் அட்டகாசம் குறைந்து வருகிறது.
ஆனால் இந்த கருவிகள் பொருத்தப்படாத சில எஸ்டேட் பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் குட்டிகளுடன் 9 காட்டுயானைகள் கொண்ட கூட்டம் கவர்க்கல் எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அங்கு கருவி எதுவும் பொருத்தப்படாததால், காட்டுயானைகள் நுழைந்தது தொழிலாளர்களுக்கும், வனத்துறையினருக்கும் உடனடியாக தெரியவில்லை.
இதற்கிடையில் அங்குள்ள மாரியம்மன் கோவில் கதவை காட்டுயானைகள் உடைத்தன. மேலும் ஆஷா பணியாளர் கலைவாணி என்பவரது வீட்டின் கதவு, ஜன்னலை உடைத்தன. அத்துடன் துதிக்கையை உள்ளே விட்டு உணவு பொருள் ஏதாவது கிடைக்குமா என தேடின. அப்போது பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இந்த சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்த கலைவாணி எழுந்து வந்து பார்த்தார்.
அப்போது காட்டுயானைகள் நிற்பதை கண்டு கூச்சலிட்டார். உடனே அருகில் வசிக்கும் தொழிலாளர்கள், அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் காட்டுயானைகளை அங்கிருந்து விரட்டினர். அப்போது அதே பகுதியில் உள்ள 8 வீடுகளின் கதவு, ஜன்னலை உடைத்தன. அதன்பிறகு அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று, தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு வருகின்றன. அவை மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.