*விவசாயிகள் கவலை
காங்கயம் : ஊதியூர் சுற்றுவட்டார பகுதியில் ஆடுகளை நாய் கடித்து, 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியான நிலையில் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.ஊதியூர் சுற்றுப்பகுதியில் பெரும்பாலும் மானாவாரி நிலங்கள் தான் உள்ளது. இதனால், அப்பகுதியில் விவசாயிகள் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் கோழிகளை வளர்த்து விவசாயம் செய்து வருகின்றனர். இதில் ஓரளவு வருமானம் பெற்று தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே நாய்கள் தொடர்ந்து ஆடுகளை கடித்து வருகிறது. குறிப்பாக பட்டியில் புகுந்தும் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை நாய்கள் கும்பலாக ஒன்று சேர்ந்து கடித்து கொன்று வருகிறது. இதில் காங்கயம் தாலுகா வடசின்னாரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நாய்கள் ஆடுகளை தினமும் ஏதாவது ஒரு விவசாயின் தோட்டத்தில் கடித்து கொண்டே வருகிறது.
இதனால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக குங்காருபாளையத்தில் ஆடுகளை நாய்கள் கடித்து கொண்டு வருகின்றன. இதுகுறித்து குண்டடம் ஊராட்சி நிர்வாகமும், காங்கயம் தாலுகா நிர்வாகமும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுபோல் தொடர்ந்து ஆடுகளை நாய்கள் கடித்து கொன்று வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதேபோல், வெள்ளகோவில் அருகே நாய் கடித்து 3 ஆடுகள் பலியான சம்பவம் விவசாயிகளிடையே அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஊதியூர், வெள்ளகோவில் பகுதியில் நடமாடும் டெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஊதியூர், வெள்ளகோவில் பகுதியில் தெருநாய் கடித்து 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி appeared first on Dinakaran.