ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவை உணவு தேடி மக்கள் வாழும் பகுதிக்குள் வருவதால் அடிக்கடி மனித விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஊட்டி அருகே உள்ள கல்லக்கோடு மந்து பகுதியைச் சேர்ந்த பழங்குடியின வாலிபர் கேந்தோர் குட்டன் (38). 26ம் தேதி விறகு சேகரிக்க காட்டிற்குள் சென்ற போது எதிர்பாரதவிதமாக அவரை வன விலங்கு தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் கிடந்த இடத்தில் வனத்துறையினர் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதி வாழ் மக்கள் தனியாக காட்டிற்குள் மற்றும் சாலைகளில் நடந்துச் செல்ல வேண்டாம். இரவில் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோந்தோர்குட்டன் குடும்பத்திற்கு இழப்பீடு நிதியாக ரூ.10 லட்சம் வனத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி வனக்கோட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில்: கேந்தோர்குட்டனை கொன்றது புலியா அல்லது சிறுத்தை என்பது தெரியவில்லை. எனவே, அப்பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேந்தோர் குட்டனை தாக்கிய விலங்கு அப்பகுதியில் வலம் வரலாம் என்பதால், தற்போதைக்கு பொதுமக்கள் யாரும் தனியாக வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கல்லக்கோடு மந்து மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
The post ஊட்டியில் பழங்குடியின இளைஞரை கொன்ற வன விலங்கை கண்காணிக்க 25 கேமராக்கள் பொருத்தம்: 24 மணி நேரம் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் தீவிரம் appeared first on Dinakaran.