ஊட்டி, ஏப்.24: ஊட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு மருத்துவ சேவை துவக்கப்பட்டது. ஊட்டியில் புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு ரூ.499 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி ஊட்டி அரசு மருத்துவ கல்லூரியை திறந்து வைத்தார். அதே ஆண்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பின்னர் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டது.
மேலும், இந்தியாவிலேயே 700 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை என்ற பெருமையும் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது. இங்கு முதன் முறையாக தமிழகத்தில் பழங்குடி மக்களுக்கென தனியாக 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மருத்துவமனையில், எம்ஆர்ஐ., சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன தொழில்நுட்பத்துடனும், 10 அறுவை சிகிச்சை அரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த நீலகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 6ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து ஊட்டி ஜெயில்ஹில் பகுதியில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இடமாற்றம் செய்யும் பணிகள் முடிந்த நிலையில், நேற்று முதல் இந்த புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள், வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை துவக்கப்பட்டது.
The post ஊட்டியில் நேற்று முதல் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேவை துவக்கம் appeared first on Dinakaran.