*உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் அவதி
ஊட்டி : ஊட்டியில் நேற்று 2 மணி நேரத்திற்கு மேல் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும்.
அதன் பின் 6 மாதங்களுக்கு மழை பெய்யது. குறிப்பாக, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மழை பெய்யாது. இச்சமயங்களில் சமவெளிப் பகுதிகள் போன்று இங்கும் வெயலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும்.
ஆனால், இம்முறை யாரும் எதிர்பார்க்காத நிலையில், கடந்த மாதம் முதல் ஊட்டியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி முதல் ஊட்டியில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரு நாட்களாக ஊட்டியில் கன மழை பெய்து வருகிறது.
நேற்று பிற்பகல் 12 மணிக்கு துவங்கிய மழை சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால், ஊட்டி படகு இல்லம் செல்லும் சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல, கூட்செட் சாலையில் காட்டாற்று வெள்ளம்போல, சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், ரயில் நிலையம் நுழைவு வாயில், கூட்செட் மற்றும் படகு இல்லம் சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியதால், இரு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கியது.
மேலும், சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மார்க்கெட்டுக்கு உள்ளும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
நேற்று கொட்டிய கன மழையால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டனர். மேலும், தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. இதனால், மலர் அலங்காரங்களையும், பூங்காவையும் சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
The post ஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது appeared first on Dinakaran.