ஊட்டி மாவட்ட மைய நூலகத்தில் இலவச வை­-பை: பயன்படுத்திக்கோங்க மாணவர்களே, இளைஞர்களே…

3 months ago 23


ஊட்டி: நூலகங்கள் என்பது காலத்தால் அழியாத பொக்கிஷங்கள் ஆகும். நூலகம் என்பது அறிவை வளர்க்கும் இடமாகும். மொழி அறிவை வளர்க்கவும், வாசிப்பு திறனை அதிகரிக்கவும் நூலகம் உதவுகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பொது நூலகத்துறை சார்பில் கடந்த 1953ம் ஆண்டு மாவட்ட மைய நூலகம் அமைக்கப்பட்டது. கடந்த 71 ஆண்டுகளாக வாசகர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பயனளித்து வருகிறது. பொது நூலகத்துறை கட்டுபாட்டில் மாவட்டம் முழுவதும் முழு நேர மற்றும் பகுதி நேர நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே இயங்கி வரும் மாவட்ட நூலகத்தில் தற்போது வரை 19 ஆயிரத்து 753 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 1 லட்சத்து 80 ஆயிரத்து 682 நூல்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் பிற மொழி என தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள், வெளியீடு என சுமார் 240 வெளியீடுகள் நூலகத்தில் உள்ளன. இதுதவிர பார்வையற்றோர் பிரிவு, செவி மற்றும் பேச்சு திறமையற்றோருக்கு தனிப்பிரிவு, சிறுவர் மற்றும் மகளிருக்கு தனிப்பிரிவு உள்ளிட்டவைகள் உள்ளன.

மேலும் இணையதள பிரிவு உள்ளது. ஒரு மணி நேரம் இணையதளம் பயன்படுத்த ரூ.10 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிவில் சர்வீஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி., உதவி ஆய்வாளர், காவலர்கள் போட்டி தேர்வுகள் மற்றும் நீட் போன்ற உயர்கல்விக்கு செல்ல நுழைவு தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், மாணவ, மாணவிகளின் வசதிக்காக தேவையான அனைத்து புத்தகங்களும் அமைதியான சூழலில் வாசிக்க வசதியாக தனி அறை பழங்குடியினர் பண்பாடு சார்ந்த தனி நூலகமும் உள்ளது. எளிதாக எடுத்து வாசிக்க வசதியாக எழுத்தாளர்கள், அறிஞர்கள், குழந்தைகள் புத்தகங்கள் என தனித்தனியாக பிரித்து அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அலமாரியின் முகப்பில் எழுத்தாளர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ஊட்டியில் உள்ள மாவட்ட மைய நூலகத்திற்கு நூல்களை படிப்பதற்காக வரும் மாணவ, மாணவிகள், வாசகர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே உள்ளது. அதிலும் மாணவ, மாணவிகள் வருகை மிக சொற்பமே.

இதனால், நூலகத்தில் வாசிப்பு பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. சமவெளி பகுதிகளில் உள்ள நூலகங்களில் போட்டி தேர்வுக்கான அறைகளில் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், ஊட்டி மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்கென உள்ள வளாகம் ஆள் ஆரவாரமின்றி அமைதியாக காட்சியளிக்கிறது. இதனால், போட்டி தேர்வு புத்தகங்கள் அலமாரியில் அலங்கரிக்கின்றன. வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பொது நூலகத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. வாசகர் வருகை குறைவிற்கான காரணங்கள் குறித்து கேட்டபோது மக்கள் எளிதில் அணுக முடியாத இடத்தில் மாவட்ட மைய நூலகம் அமைந்திருப்பதே முக்கிய காரணம். சேரிங்கிராஸ், ஏடிசி மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் இருந்து வர வேண்டும் என்றால் சுமார் 2 கிமீ தூரம் நடந்து வர வேண்டும். இப்பகுதிக்கு எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லை. இதனால், பெரும்பாலானோர் நூலகத்திற்கு வர ஆர்வம் காட்டுவதில்லை என பரவலாக கூறப்படுகிறது.

இருந்தபோதும் மாவட்ட மைய நூலக நிர்வாகம் சார்பில் ஊட்டியில் உள்ள அரசு கலை கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள், பள்ளிகளில் வாசிப்பு பழக்கம் குறித்தும், மாவட்ட மைய நூலகத்தில் உள்ள வசதிகள் குறித்தும் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால், தற்போது நூலகத்திற்கு வருவோர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்ட நூலக அலுவலர் வசந்தமல்லிகா கூறுகையில், ‘‘நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தனி மனித வளர்ச்சிக்கும் வாசிப்பு பழக்கம் அவசியமாகிறது. நூலகத்திற்கு வாசகர்களை அதிகளவில் வர வைப்பதற்காக கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, ஓரளவிற்கு வருகின்றனர். ஊட்டி நகரில் மக்கள் கூடும் பகுதியில் நூலக கிளை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.

மாவட்ட மைய நூலகர் ரவி கூறுகையில், ‘‘செல்போன், இணையதளம் என பல்வேறு தொழில் நுட்ப வசதிகள் இருந்தாலும் அவற்றை பயன்படுத்துவதோடு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்திற்கும் மாணவர்கள், இளைய சமுதாயத்தினர் வர வேண்டும். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை நூல்களை வாசிக்க ஊக்கப்படுத்த வேண்டும். இளம் தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்களை நடத்தி வருகிறது. மலைகள் சூழ்ந்த ஊட்டி நகரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, உள்ளிட்ட அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளன. இவற்றை போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள அனைத்து வசதிகளும் உள்ளன. இது துவிர ஆய்வு நூல்கள், இணையதள வசதி, இலவச வை-பை வசதி உள்ளது. உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும்’’ என்றார்.

The post ஊட்டி மாவட்ட மைய நூலகத்தில் இலவச வை­-பை: பயன்படுத்திக்கோங்க மாணவர்களே, இளைஞர்களே… appeared first on Dinakaran.

Read Entire Article