ஊட்டி பைக்காரா படகு இல்லம் அருகே உலா வரும் ஒற்றை யானை: சுற்றுலா பயணிகள் அச்சம் : வனத்துறை கண்காணிப்பு

9 hours ago 2

ஊட்டி: ஊட்டி அருகே பைக்காரா படகு இல்ல பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக உள்ளது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை, காட்டு மாடு, கரடி, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. இதனிடையே ஊட்டி – கூடலூர் சாலையில் பைக்காரா பகுதி உள்ளது.
இப்பகுதியில் மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை மற்றும் நீர் வீழ்ச்சி உள்ளது.

இந்த அணையில் சுற்றுலா வளர்ச்சி கழக கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லம் உள்ளது. வனங்களின் நடுவே படகு சவாரி செய்து மகிழ வசதியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதே சமயம் முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழையில்லை. இதனால், முதுமலை புலிகள் காப்பகத்தில் பசுமை பரப்பு குறைந்து வறட்சி தலைதூக்க துவங்கியுள்ளது.

அதே சமயம் மழை காரணமாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் வனங்களில் பசுமை திரும்பியுள்ளன. இந்நிலையில் சோலூர் கிராமத்திற்கு கீழ்புறம் அமைந்துள்ள பொக்காபுரம் பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சோலூர் பகுதியில் முகாமிட்டிருந்தது. இந்த ஆண் யானை தற்போது இடம் பெயர்ந்து பைக்காரா அணை பகுதியில் உலா வருகிறது.

அணையில் நீர் அருந்துவது வனத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பிளிறிய படி அங்குமிங்குமாக நடமாடி வருகிறது. இதனை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு அதனை வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் வனத்துறையினர் அப்பகுதியில் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

The post ஊட்டி பைக்காரா படகு இல்லம் அருகே உலா வரும் ஒற்றை யானை: சுற்றுலா பயணிகள் அச்சம் : வனத்துறை கண்காணிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article