ஊட்டி நகராட்சி கூட்டத்தில் பொறியாளரை பணி மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றம் – பரபரப்பு

3 hours ago 3

ஊட்டி: ஊட்டி நகராட்சி கூட்டத்தில், பொறியாளரை பணி மாற்றம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது. ஊட்டி நகராட்சி நகர மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். கமிஷனர் ஸ்டேன்லி பாபு மற்றும் துணைத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் மவன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியவுடன், நகராட்சியில் பொறியாளராக உள்ள சேகரன், நகராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் கவுன்சிலர்கள் கேட்டால், அதற்கு முறையான பதில் அளிப்பதில்லை மற்றும் தகாத வார்த்தைகள் பேசுவதாக பெரும்பாலான கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், அவரை பணி மாற்றம் செய்ய வேண்டும் என அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து, ஊட்டி நகராட்சி பொறியாளர் சேகரனை பணி மாற்றம் செய்ய வலியுறுத்தி நகராட்சி உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்புவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரவிக்குமார் (துணை தலைவர், திமுக.,): தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு கோடை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனவே, இவர்கள் இங்குள்ள நகராட்சி பூங்காக்களையும் பார்வையிடும் வகையில், ஊட்டி நகரில் உள்ள அனைத்து நகராட்சி பூங்காக்களையும் மேம்படுத்தி மலர் செடிகள் நடவு செய்து அழகிய பூங்காக்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கழிப்பிடங்களின் கட்டுமான பணிகளை முடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி நகரில் உள்ள அனைத்து நகராட்சி பூங்காக்கள், சாலையோரங்களில் நடைபாதைகள், மரங்களில் அலங்கார மின் விளக்குகள் அமைக்க வேண்டும். ஊட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் உள்ள மண் குவியல்களை அகற்ற வேண்டும். சாலையோரங்களில் பல நாட்கள் எடுக்காமல் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். ஊட்டி படகு இல்லம் சாலையோரத்தில் போடப்பட்டுள்ள அலங்கார வேலிகளை உடைத்து பொருட்களை திருடிச் செல்லும் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சியில் பல ஆண்டுகளாக தூய்மை பணிகள் மேற்கொண்டு வரும் தூய்மை பணியாளர்களை நகராட்சி குடியிருப்புக்களில் தொடர்ந்து வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஜார்ஜ் (திமுக.,): ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி கேட்டு கடந்த பல ஆண்டுகளாக சிலர் காத்திருக்கின்றனர். எனவே, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1500 சதுர அடிக்குள் வீடுகளை கட்டுவதற்கு அனுமதி நகராட்சியே வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கலெக்டர் அலுவலகம் முதல் சேரிங்கிராஸ் வரையில் உள்ள மாற்று பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவது திட்ட குடிநீர் சர்ச்ஹில் பகுதி மக்களுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாந்திவிஜய் மைதானத்தை நகராட்சி எடுத்து சீரமைக்க வேண்டும். பார்சன்ஸ்வேலி தண்ணீர் முறையாக ஊட்டி நகர் மக்களுக்கு கிடைக்கும் வகையில், நீரேற்று மையத்தில் மின் துண்டிப்பு ஏற்படாமல் இருக்க, நிலத்தடி மின் கேபிள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஊட்டி நகரில் நடைபாதை ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும். நகரில் உள்ள அனைத்து வாட்டர் ஏடிஎம்.,களையும் சீரமைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டும்.

முஸ்தபா (திமுக.,): ரோஜா பூங்கா மற்றும் ஜெஎஸ்எஸ்., எல்க்ஹில், ராகவேந்திரா கோயில், முனீஸ்வர் போன்ற முக்கியமான பகுதிகளில் தண்ணீர் பிரச்னை உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓபிசி., சர்ச் பகுதியில் கழிவு நீர் சாலையில் ஓடுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். பிக்‌ஷாப் பகுதியில் பார்க்கிங் தளத்திற்கு புதிதாக வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை ரத்து செய்து, உள்ளூர் வாகனங்கள் எப்போதும் போல் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடப்பமந்து கால்வாய் தடுப்பு சுவர்கள் இடிந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மேலும், இதனை பயன்படுத்தி பலரும் கால்வாயில் குப்பைகள் கொட்டுகின்றனர். அதனை சீரமைக்க வேண்டும். குப்பைகள் கால்வாயில் போடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தம்பி இஸ்மாயில் (திமுக.,): எனது வார்டு தமிழக அரசின் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு மற்றும் ஊட்டி நகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி குடியிருப்புக்களில் குடியிருந்து வருபவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பலர் 100 ஆண்டுக்கும் மேலாக இந்த குடியிருப்புக்களில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, கருணை அடிப்படையில், தொடர்ந்து அவர்கள் அந்த குடியிருப்பை பயன்படுத்திக்கொள்ள நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபுதாகீர் (திமுக.,): ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள சிலேட்டர் அவுஸ் பகுதியில் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். சிலேட்டர் அவுஸ் பகுதியில் பகுதியில் இருந்து ரத்தம் மற்றும் கழிவுகள் கால்வாயில் செல்வதால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பல கொடிய நோய்கள் ஏற்படும் அபாயமும் நீடிக்கிறது.

கீதா (திமுக.,): காந்தல் சாலையில் பல்வேறு பகுதிகளிலும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை சீரமைக்க வேண்டும். புதுநகர் பகுதியில் இருந்து காந்தல் பகுதிக்கு வரும் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.
நாகமணி (திமுக.,): பட்பயர் சாலை பழுதடையாமல் இருக்க சாலையோரங்களில் கான்கிரீட் அமைக்க வேண்டும். கணபதி நகர் பகுதியில் நடைபாதை அமைக்க வேண்டும்.
விசாலாட்சி (திமுக.,) விவேகானந்தர் பகுதியில் தண்ணீர் பிரச்னை உள்ளது. எனவே, இப்பகுதிக்கு முறையாக பார்சன்ஸ்வேலி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வராஜ் (திமுக.,): நொண்டிமேடு பகுதிகளுக்கு 12 நாட்களுக்கு ஒரு முறையே தண்ணீர் வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அப்பகுதிக்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும். அப்பகுதியில் உள்ள சமுதாய கூடத்தை சீரமைக்க வேண்டும். கழிவு நீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். ெதரு நாய்கள் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஷ்ணு பிரபு (திமுக.,): எனது வார்டில், தெரு விளக்குகள் எரியாத நிலையில், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். கழிவு நீர் கால்வாய்கள் அமைத்து முறையாக தூர் வர வேண்டும். சாலையோரங்கள் மற்றும் நடைபாதைகளில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்.
கஜேந்திரன் (திமுக.,): மேல்காந்தி நகர் மற்றும் கீழ்காந்தி நகர் பகுதியில் கடந்த வாரம் பெய்த மழையால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை நகராட்சி அதிகாரிகள் யாரும் சென்று பார்க்கவில்லை. எனவே, அங்கு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
குமார் (அதிமுக.,): பிங்கர்போஸ்ட் முதல் விசி காலனி வரையில் உள்ள பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும். மருத்துவக் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயலட்சுமி (காங்.,): தீட்டுக்கல் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

ரஜினிகாந்த் (காங்.,): உழவர் சந்தை, வால்சம் சாலை பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்களில் குடிநீர் குழாய்கள் செல்கிறது. இதனால், குடிநீர் மாசுபட வாய்ப்புள்ளது. எனவே, குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும். செல்பாண்ட் சாலை, எஸ்எம்., மருத்துவமனை பின்புறம் உள்ள சாலை ஆகியவைகளை சீரமைக்க வேண்டும்.
நாதன் (காங்.,) பேசுகையில், ‘‘டேவிஸ் பூங்காவை சீரமைத்து மலர் செடிகள் நடவு செய்ய வேண்டும். அதனை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே கான்ட்ராக்டருக்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள டெண்டர் வழங்கப்பட்டுள்ள. ஆனால், அவர் முறையாக பணிகள் மேற்கொள்வதில்லை. எனவே, சம்மந்தப்பட்ட கான்ட்ராக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் அதிகரித்துள்ள ஆட்டோ ஸ்டேண்டுகளை கட்டுப்படுத்த வேண்டும். இதனை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார். இதைத்தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.

The post ஊட்டி நகராட்சி கூட்டத்தில் பொறியாளரை பணி மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றம் – பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article