ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை முதல்வர் துவக்கி வைத்தார்: ரோடு ஷோவில் மக்கள் உற்சாக வரவேற்பு

5 hours ago 2

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்து மலர் அலங்காரங்களை வெகுவாக ரசித்து பார்வையிட்டார். ‘ரோடு ேஷா’ சென்ற முதல்வரை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு 5 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார். ரூ.24.60 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த பெரணி இல்லத்தையும் திறந்து வைத்தார். மலர் கண்காட்சியில் 7 லட்சம் மலர்களை கொண்டு அமைக்கப்பட்ட அரண்மனை, கல்லணை, அன்னபட்சி உள்ளிட்ட மலர் அலங்காரங்களையும், பெரணி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான பெரணி செடிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரசித்து பார்த்தார். பின்னர், தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் கொய்மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரியணையில் அமர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். தொடர்ந்து, பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தார். விழாவில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், மு.பெ. சாமிநாதன், எம்.பி. ஆ.ராசா, அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், எம்எல்ஏ, கணேஷ், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மலர் கண்காட்சியை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு மாளிகையில் இருந்து புறப்பட்டார். அப்போது சாலையின் இரு புறங்களிலும் மக்கள் அதிகம் கூடி இருந்தனர். அவர்களை பார்த்தவுடன் வாகனத்தில் இருந்து இறங்கிய முதல்வர் நடந்து சென்றார். தமிழ்நாடு மாளிகை முதல் தமிழ்நாடு தோடர் பழங்குடியின மக்களின் மந்து வரை நடந்து வந்த அவருக்கு சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் கூடி நின்று வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, தோடர் பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி ஆடை அணிந்து வரவேற்றனர். முதல்வருக்கு தோடர் பழங்குடியின மக்களின் சால்வை வழங்கினர். பொதுமக்களையும், திமுகவினைரையும் பார்த்து முதல்வர் கையசைத்தும், கைகுலுக்கியும், புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து தாவரவியல் பூங்கா மேடை வரை முதல்வர் நடந்து வந்தார். சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இரு புறங்களிலும் நின்று பொதுமக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். இந்த ‘ரோடு ஷோ’வின்போது, பொதுமக்களிடம் சென்று முதல்வர் கைகுலுக்கி, புகைப்படம் எடுத்துக்கொண்டது மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. பூங்காவிலும் அலங்காரங்களை கண்டு ரசித்த பின்னர், சுற்றுலா பயணிகளை முதல்வர் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனால், சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.

சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு துறைகளின் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தன. அப்போது, அந்த அரங்கில் இருந்த நிர்வாகி, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஒரு கோட் வழங்கினார். அதனை வாங்கி அப்போதே அணிந்துகொண்டு அவருக்கு ‘சர்ப்ரைஸ்’ அளித்தார்.

50 சிறப்பு பஸ்கள்
வரும் 25ம் தேதி வரை நடக்கும் மலர் கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஊட்டி-கோவை இடையே 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல, அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்கும் வகையில் 30-க்கும் மேற்பட்ட சர்க்யூட் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

The post ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை முதல்வர் துவக்கி வைத்தார்: ரோடு ஷோவில் மக்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article