ஊட்டச்சத்து மிகுந்த மைக்ரோ கீரைகள்…

1 week ago 4

அதிகரித்து வரும் மக்கள் தொகையினால் அதிக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. சமீபகாலமாக ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக கீரைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மைக்ரோ கீரைகளை பயன்படுத்துவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். காய்கறிகள், தானியங்கள் மற்றும் மூலிகைகளின் இளம் கீரைகளே மைக்ரோ கீரைகள் எனப்படுகிறது. விதை வளரத் தொடங்கிவிட்டால் அதனை முளை என்றும், முளை வளரத் தொடங்கியதும் அது மைக்ரோ கீரை என்றும் அழைக்கப்படுகிறது. இவை முளைக்கும் கீரைகளுக்கும், இளம் கீரைகளுக்கும் இடையே உள்ள ஒரு நிலையாகும். மைக்ரோ கீரைகள் என்பது மையத்தண்டு, வித்திலைகள் மற்றும் இளம் ஜோடி இலைகளுடன் அறுவடை செய்யப்படுகிறது. முளைகள்பொதுவாக சுமார் 2 முதல் 3 அங்குலம் உயரம் வரை வளரும். மைக்ரோ கீரை 8 முதல் 10 அங்குலம் வரை வளர்க்கப்படும் சராசரியாக 10 முதல் 14 நாட்களுக்கு இடையில் அறுவடை செய்யலாம். முளைகள் வளர்வதற்கு சூரிய ஒளியும், மண்ணும் தேவையில்லை. ஆனால் கீரை வளர்ச்சிக்கு சூரிய ஒளியும், மணல், தண்ணீர் ஆகியவை அவசியமாகிறது. மைக்ரோ கீரைகள் சுவையும், மனமும் கொண்டுள்ளதால் இவற்றை கூட்டு பொரியல், மசியல், தோசை, சப்பாத்தி, சாண்ட்விச், பர்கர், பீட்சா என பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. பல உணவு வகைகளில் மைக்ரோ கீரைகள் சிறு சிறு அளவில் நறுக்கப்பட்டு அலங்காரப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

மைக்ரோ கீரைகள் உற்பத்தி செய்யும் முறை

மைக்ரோ கீரைகள் வளர்ப்பதற்கு ஊடகமாக மணல் அல்லது மணலுடன் வெர்மிகுலைட், பர்லைட் மற்றும் பட்டை பயன்படுத்தலாம். தட்டுக்களில் அரை முதல் ஒன்று அல்லது இரண்டு அங்குலம் ஆழத்திற்கு ஊடகத்தை நிரப்ப வேண்டும். பெரும்பாலான பயிர்களுக்கு சிறிதளவு உரமே போதுமானது. சில கீரைகளின் வளர்ச்சிக்கு உரம் தேவைப்படுவதில்லை. ஏனெனில் விதையே முளைப்பதற்கு போதுமான ஊட்டச்சத்தை கொண்டிருக்கும். பாதுகாக்கப்பட்ட சூழலில் வளர்க்கப்படும் கீரைகள் நல்ல சுவையுடன் இருக்கும்.

மைக்ரோ கீரைகளின் நன்மைகள்

சிவப்பு முட்டைக்கோஸின் மைக்ரோ கீரைகளில் லைட்டமின் சி, கே மற்றும் இ நிறைந்துள்ளன. பிரோக்கோலியில் உள்ள சல்பரோ பேன்கள், புற்றுநோய் செல்களின் செயல்பாட்டை தடுக்கின்றன. வெந்தயக் கீரையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்த சோகையை குறைக்கும். உண்ணக்கூடிய இளம் கீரைகள் பல்வேறு வகையான காய்கறிகள், மூலிகைகள் மற்றும் பிற தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. தண்டு மற்றும் இலைகள் உட்பட ஒன்று முதல் மூன்று அங்குலம் (2.5 முதல் 7.6 சென்டிமீட்டர்) இருக்கும்போது அறுவடை செய்ய வேண்டும். மைக்ரோ கீரைகளை விதைத்ததிலிருந்து சராசரியாக 10 முதல் 14 நாட்களில் அறுவடை செய்யலாம்.

ஊட்டச்சத்து

மைக்ரோ கீரைகளில் ஆஸ்கார்பிக் அமிலம், விட்டமின் சி, விட்டமின் கே, பைலோ குவினோன், விட்டமின் இ, போகோபெரோல்கள், விட்டமின் ஏ, பி மற்றும் கரோட்டின் அதிகளவு உள்ளது. இத்தகைய சத்து நிறைந்த கீரையை சாப்பிடுவது நமது உடல்நலத்திற்கு நல்லது. மேலும் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்து இந்த கீரையை சாப்பிடக் கொடுப்பது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

பயிர் பெருக்கம்

இந்த மைக்ரோ கீரையை வீட்டிலேயே சாகுபடி செய்யலாம். அதாவது தொட்டி மற்றும் கண்ணாடியால் ஆன கொள்கலனில் இதனை சாகுபடி செய்யலாம். விதையை ஊற வைத்து வடிகட்டி எடுக்க வேண்டும் (6 முதல் 8 மணி நேரம்). விதையை சீராக கொள்கலனில் தண்ணீர் தெளிக்க வேண்டும். 5 நாள் கழித்து முளைக்கத் தொடங்கும். 1 முதல் 2 வாரங்களில் அறுவடை செய்யலாம். பிரோக் கோலி, அருகுலா, முள்ளங்கி, வெங்காயம் மற்றும் கடுகு போன்றவற்றில் மைக்ரோ கீரைகள் உற்பத்தி செய்யலாம். இவைகளில் கடுகு மற்றும் முள்ளங்கி கீரைகள் அதிகளவு சுவையாக இருக்கும். முள்ளங்கி விரைவாக வளரும் தன்மை கொண்டது. மைக்ரோ கீரைகளை முறையாக சிப்பமிடுதல் மூலம் அதிக நாட்கள் வைத்திருக்கலாம். குளிர்சாதன பெட்டியில் 40 டிகிரி சென்டிகிரேட் அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையில் சேமிக்கப்படும்போது அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.

– பெ. ஐரின் வேதமணி,
– பி சண்முகசுந்தரம்.
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை.

The post ஊட்டச்சத்து மிகுந்த மைக்ரோ கீரைகள்… appeared first on Dinakaran.

Read Entire Article