ஊட்டச்சத்து பாதுகாப்பு – பயறுவகை திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.3.3 கோடி நிதி ஒதுக்கீடு

1 month ago 8

தூத்துக்குடி, செப்.30:உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு – பயறுவகை திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.3.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம்-பயறுவகை 24-25ம் ஆண்டில் செயல்படுத்திட ரூ.3.3 கோடி நிதி இலக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயறு வகைப் பயிர்களான உளுந்து மற்றும் பாசி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு செயல் விளக்கத் திடல் அமைத்திட ஒரு எக்டேருக்கு ரூ.8500 மானியத்தில் இடுபொருட்கள், உளுந்தில் மக்காசோளம் ஊடுபயிர் செயல் விளக்கத் திடல் அமைத்திட ஒரு எக்டேருக்கு ரூ.8500 மானியத்தில் இடுபொருட்கள், உயர் விளைச்சல் இரக விதை விநியோகத்திற்கு ஒரு கிலோவிற்கு ரூ.50 மானியம், உயர் விளைச்சல் இரக விதை உற்பத்தி ஊக்கத்தொகை ஒரு கிலோவிற்கு விதை கிரையத்துடன் கூடுதலாக ரூ.25, நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்கள் ஆகியவை 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. உயிரியியல் பயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு ஒரு எக்டேருக்கு ரூ.500 மானியம், இலை வழி தெளிப்பு உரத்திற்கு ஒரு எக்டேருக்கு ரூ.2000 மானியமாக வழங்கப்பட உள்ளது.

விவசாயிகள் தங்கள் வயல்களில் தரமான விதை உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கிட கூடுதலாக கிலோவிற்கு ரூ.25 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகள் விதை உற்பத்தியில் ஈடுபட அழைக்கப்படுகிறார்கள். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவர் செயலியில் முன் பதிவு செய்யலாம் அல்லது வேளாண்மை திட்டங்கள் தொடர்பான கூகுள் விரிதாளில் பதிவு செய்யலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

The post ஊட்டச்சத்து பாதுகாப்பு – பயறுவகை திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.3.3 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Read Entire Article