தேவதானப்பட்டி, அக். 14: பெரியகுளம் பகுதியில் விவசாயிகள் ஊடுபயிர் செய்து அதிக லாபம் பெறலாம் என வேளாண்மைத்துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.சாகுபடி பயிர்களில் நோய் தாக்குதல் மற்றுமு பூச்சி தாக்குதல்களை தடுக்கவும், நிலத்தில் ஈரப்பதம் காக்கவும், மண் வளத்தை காக்கவும் இந்த ஊடுபயிர் சாகுபடி உதவுகிறது. ஊடுபயிர் செய்யும் பயிர் அறுவடையில் 40 சதவீதம் வருமானம் கிடைக்கிறது. ஒரு விதை தாவங்களான சோளம், கம்பு, மக்காச்சோளம், போன்ற பயிர்களுடன் இரு விதை தாவர பயிர்களான நிலக்கடலை போன்றவை ஊடுபயிராக பயிரிடலாம், ஊடுபயிர் முக்கிய பயிரிகளுக்கு பக்கத்துணையாக பாதுகாப்பு அரணாக இருக்கிறது. ஒரு பயிரை மட்டும் உற்பத்தி செய்தால் அதிக லாபம் பெறமுடியாது.
எனவே, ஒரு மடங்கு நிலம், இரு மடங்கு உற்பத்தி, மும்மடங்கு லாபம் என்ற விகிதத்தில் ஒரு நிலத்தில் முக்கிய பயிர், ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் என்று சாகுபடி செய்தால் அதிகளவில் விவசாயிகள் லாபம் பெறலாம். ஊடுபயிர்களால் முக்கிய பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. முக்கிய பயிருக்கு வரும் இடையூறுகளை தடுக்க உதவுகிறது. ஒவ்வொரு முக்கிய பயிருக்கும், ஒவ்வொரு விதமான ஊடுபயிர் செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக பருத்தியில் ஊடுபயிராக உளுந்து, பாசி, தட்டை, வெண்டை, கொத்தவரை ஆகியவற்றை சாகுபடி செய்யலாம். வரப்பு பயிராக சூரியகாந்தி, செண்டுமல்லி, சாகுபடி செய்யலாம். அதே போல் நிலக்கடலை பயிரில் துவரை, உளுந்து, ஆகிவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். தென்னையில் ஊடுபயிராக சணப்பு, கொழுஞ்சி, கொக்கோ, ஆகியவற்றை சாகுபடி செய்யலாம் என வேளாண்மைத்துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
The post ஊடுபயிர் செய்தால் அதிக லாபம் பெறலாம் வேளாண்துறையினர் ஆலோசனை appeared first on Dinakaran.