திருச்சி: திருச்சி சஞ்சீவி நகர் வடமல்லி தெருவை சேர்ந்தவர் காமாட்சி(52). இவரது மகன் குணசேகரன்(34). மருமகள் சுலோசனா(30). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.குணசேகரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் தினமும் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்து தாய் மற்றும் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று அதிகாலையும் குணசேகரன் வழக்கம்போல் போதையில் வீட்டுக்கு வந்து தாய், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அறைக்கு சென்று தூங்கி விட்டார்.
சிறிது நேரத்தில் குணசேகரன் மயங்கி கிடப்பதாக கூறி அவரை மாமியார், மருமகள் சேர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவலறிந்து வந்த கோட்டை போலீசார் குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் காலி சிரிஞ்சில் வெறும் காற்றை ஏற்றி உடலில் செலுத்தியும், கழுத்தை நெரித்தும் குணசேகரன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிந்து தாய், மருமகளை பிடித்து விசாரித்தனர். இதில் காமாட்சிக்கு பூசாரி தெருவை சேர்ந்த விஜயகுமாருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இவரது உறவினர்கள் விக்கி(எ)நித்தியானி , குபேந்திரன்(எ)நெல்பியா(19). திருநங்கைகள். இவர்கள் 3 பேரிடமும் மகன் தினமும் குடித்துவிட்டு வந்து போதையில் தன்னையும், மருமகளையும் தாக்கி துன்புறுத்துவதாக புலம்பி வந்துள்ளார். இதனால் குணசேகரனை கொல்ல திட்டமிட்டனர். அதன்படி நேற்று போதையில் வந்து தகராறு செய்து விட்டு அறையில் குணசேகரன் தூங்குவதை காமாட்சி கள்ளக்காதலன், உறவினர்கள் 2 பேரிடமும் தெரிவித்தார்.
இதையடுத்து விஜயகுமார், விக்கி, குபேந்திரன் ஆகிய 3 பேரும் காமாட்சி வீட்டுக்கு வந்தனர். இதில் குபேந்திரன் கையில் எடுத்து வந்திருந்த உடலில் மருந்து செலுத்த பயன்படுத்தும் ஊசியில் (சிரிஞ்ச்) வெறும் காற்றை ஏற்றி அறைக்குள் படுத்திருந்த குணசேகரனின் உடலில் செலுத்தினார். பின்னர் 3 பேரும் சேர்ந்து சுடிதார் துப்பட்டாவால் குணசேகரனின் கழுத்தை ெநரித்து கொன்றுள்ளனர். யாரும் வருகிறார்களா என பார்க்க தாயும், மனைவியும் வாசலில் நின்று நோட்டமிட்டுள்ளனர்.
பின்னர் குணசேகரனை கொன்றதை உறுதி செய்த பின்னர் விஜயகுமார் உள்ளிட்ட 3 பேரும் ஒன்றும் நடக்காதது போல் சென்று விட்டனர். மகனை கொன்றது வெளியில் தெரியாமல் இருக்க காமாட்சி, அவர் மயங்கி கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் முன்பு நாடகமாடிவிட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து தாய், மனைவி உள்பட 5 பேரையும் போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காற்று ஊசி செலுத்தியது எப்படி?
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊசியில் மருந்து ஏற்றி உடலில் செலுத்துவது வழக்கம். ஊசியில் மருந்தை உள்ளிழுத்து, பின்னர் அதை உடலில் செலுத்துவார்கள். ஆனால் மருந்தை உள்ளிழுப்பது போல், வெறும் ஊசியை உள்ளிழுத்தால், அதனுள் காற்று புகுந்து விடும். அந்த காற்றை உடலில் செலுத்தினால், ரத்தம் உறைந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுமாம். இவ்வாறு தான் குணசேகரன் உடலில் காற்று ஊசி செலுத்தி அவரை கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.
The post ஊசி மூலம் உடலில் காற்றை செலுத்தி வாலிபர் கொலை: கள்ளக்காதலனுடன் தாய், மனைவி, 2 திருநங்கைகள் கைது appeared first on Dinakaran.