ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

4 hours ago 1

அண்ணாநகர்: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்தனர். பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கத் தொகை அதிகரித்து வழங்குகின்றனர். அங்கு குறைந்தபட்ச மாற்றுத் திறனாளிக்கு 6 ஆயிரம் ரூபாயும் அதிகபட்ச மாற்றுத்திறனாளிக்கு 10 ஆயிரம் ரூபாயும் முற்றிலும் நடக்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்குகின்றனர். இதுபோன்று தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கும் தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த தீர்வும் கிடைக்காததால் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத் திறனாளிகள் சென்னைக்கு வந்தனர். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்த அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். அப்போது மாற்றுத் திறனாளிகள் தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பிறகு சுமார் 500க்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

‘’மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் 30, 40 நாட்கள் தான் வேலை வழங்கப்படுகின்றன. கூலியும் முழுவதுமாக கொடுக்காமல் 150, 100, 80 ரூபாய்தான் கொடுக்கப்படுகிறது. சில மாவட்டங்களில் மட்டுமே ஒரு நாட்கள் வேலையும் கொடுத்து கூலியும் கொடுக்கின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

இன்று காலை தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்டவர்கள் வந்தோம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் எங்களை கைது செய்துள்ளனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருக்கிறோம். அனுமதி வழங்கிய இடத்தில் சென்று போராடுங்கள், இங்கு போராடக்கூடாது என்று கூறி காவல்துறையினர் எங்களை அப்புறப்படுத்தியுள்ளனர். ஊக்கத் தொகையை உயர்த்தவேண்டும் என்று எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிடில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.

முன்னதாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் கிடைத்ததால் இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article