சென்னை: உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு 7 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்களை வழங்காமல் இழுத்தடிப்பது தான் திராவிட மாடலா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள பல உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை என்பதும், இதுதொடர்பான உள்ளாட்சி அமைப்புகளின் அணுகுமுறையை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது என்பதும் அதிர்ச்சியளிக்கிறது. தங்களின் வாழ்நாளில் பெரும் பகுதியை அரசுக்காகவும், உள்ளாட்சி அமைப்புகளுக்காகவும் உழைத்துக் களைத்த பணியாளர்களுக்கு ஓய்வுக்கால பயன்களை வழங்குவதில் அரசு நிர்வாகம் காட்டும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை.