திருவாரூர், நவ.20: திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் 430 கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி வரும் 23ந் தேதி கிராமசபை கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் வரும் 23ந் தேதி உள்ளாட்சிகள் தினத்தினையொட்டி கிராமசபை கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சிகளில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த, சாரா தொழில்கள் மற்றும் இதர தலைப்புகளில் விவாதிக்கப்படவுள்ளது. கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப்பணிகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்ற இருக்கும் நிலையில் அனைத்து தரப்பு பொதுமக்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதோடு, தங்கள் ஊராட்சியின் வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பையும் முழுமையாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் ஜாதி மற்றும் பாலின பாகுபாடின்றியும், எவ்வித புகாருக்கு இடம் அளிக்காமல் இந்த கிராம சபா கூட்டத்தினை நடத்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
The post உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் appeared first on Dinakaran.