சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினராவதற்கான விண்ணப்பம் மாவட்ட வாரியாக ஜூலை 1 முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. உறுப்பினராவதற்கான தகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்களாக இடம்பெறும் வகையில் மாபெரும் சமூகநீதி உரிமையை சட்டமாக்கியுள்ளோம். இதன்மூலம், 13 ஆயிரத்து 357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650 பேரும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2,984 மாற்றுத் திறனாளிகளும் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார். அதன்படி, இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வாரியாக ஜூலை 1 முதல் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட உள்ளது. இதற்கென மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி குழுவைச் சேர்ந்த ஒருவர் இடம்பெற்றிருப்பார். நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மன்றக் கூட்டங்களில் பங்கேற்கலாம்.
உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருக்கு வழங்கப்படுவது போன்று மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினருக்கும் மதிப்பூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினராக நியமனம் செய்வதற்கான தகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, உறுப்பினராக சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஊனமுற்ற நபராக இருக்க வேண்டும். தமிழ்நாடு ஊனமுற்றோர் உரிமைகள் விதிகளின் கீழ் நியமிக்கப்பட்ட சான்றளிக்கும் சான்றிதழிலிருந்து பெறப்பட்ட செல்லுபடியாகும் ஊனமுற்றோர் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
பஞ்சாயத்து உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட தேதியில் அல்லது அதற்கு முன் 21 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான குழு விண்ணப்பத்தைப் பெற்றவுடன், விண்ணப்பதாரர்களின் சேவை மற்றும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பத்தை ஆராயும். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர், பஞ்சாயத்து ஆய்வாளருக்கு பரிந்துரையை அனுப்பும். மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையைப் பெற்றவுடன், மாவட்ட ஆட்சியர், பஞ்சாயத்து ஆய்வாளர், தகுதியான வேட்பாளரை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களாக நியமிப்பார்கள்.
The post உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினராக ஜூலை 1 முதல் மாவட்ட வாரியாக விண்ணப்பம் விநியோகம்: உறுப்பினராவதற்கான தகுதிகள் வெளியீடு appeared first on Dinakaran.