உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை ஒரே நாளில் கடந்து சென்ற 45 ஆயிரம் வாகனங்கள்

2 weeks ago 2

உளுந்தூர்பேட்டை, ஜன. 19: பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு பயணம் செய்ததில் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை ஒரே நாளில் 45 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக உள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரும் நிலையில் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நேரங்களிலும் தொடர் விடுமுறை காலங்களிலும் அதிகளவில் சுங்கச்சாவடி வழியாக வாகனங்கள் செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த வாரம் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றனர். பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை நோக்கி அனைவரும் கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றதால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. அந்த வகையில், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் சென்றது.

நேற்று ஒரே நாளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 30 ஆயிரம் வாகனங்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து சென்றதாக சுங்கச்சாவடி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இரவு முழுவதும் 15,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றதன் மூலம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை நேற்று ஒரே நாளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்னை நோக்கி கடந்து சென்றுள்ளதாக தெரிகிறது. போக்குவரத்து நெரிசல் இன்றி அனைத்து வாகனங்களும் விரைந்து அனுப்புவதற்கு வசதியாக டோல்கேட்டில் கூடுதலாக கவுண்டர்கள் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் டோல்கேட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை ஒரே நாளில் கடந்து சென்ற 45 ஆயிரம் வாகனங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article