உளுந்தூர்பேட்டை அருகே 2 குழந்தைகளை கொன்று 10 ஆண்டு தலைமறைவாக இருந்த தந்தை கைது: சென்னையில் சிக்கினார்

5 hours ago 3

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சிவாபட்டினத்தை சேர்ந்தவர் ஏர் உழவன் (45). லாரி கிளீனர். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் மோகனப்பிரியா (8), வீரமுத்து (6) என்ற 2 பிள்ளைகளும் இருந்தனர். கடந்த 2014ம் ஆண்டு குடும்ப பிரச்னை காரணமாக சித்ரா, கணவரை விட்டு பிரிந்து சென்றார். ஏர் உழவன் பு.கொணலவாடியை சேர்ந்த முருவாயி என்ற 2வது மனைவியுடன் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று ஏர் உழவனுக்கும் முருவாயிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் ஏர் உழவன், முதல் மனைவியின் பிள்ளையான மோகனப்பிரியா மற்றும் முருவாயிக்கு பிறந்த வீரமணி (4) ஆகிய இருவரையும் பு.கொணலவாடியில் உள்ள ஒரு கிணற்றில் தள்ளி கொலை செய்தார். வீரமுத்துவையும் கிணற்றில் தள்ள முயன்றபோது படுகாயத்துடன் தப்பினான்.

இந்த 2 பிள்ளைகளை கொலை செய்த வழக்கில் ஏர் உழவன் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் தனிப்படை அமைத்து கடந்த 10 ஆண்டுகளாக தேடினர். இந்நிலையில் சென்னை அம்பத்தூர் நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராகவும், ஆட்டோ ஓட்டியும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஏர் உழவனை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே 2 குழந்தைகளை கொன்று 10 ஆண்டு தலைமறைவாக இருந்த தந்தை கைது: சென்னையில் சிக்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article