கமலா ஹாரிஸ்… அமெரிக்காவின் 49வது துணை ஜனாதிபதியான அமெரிக்க அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர். முதல் பெண் துணை அதிபர் மற்றும் அமெரிக்க வரலாற்றில் மிக உயர்ந்த பெண் அதிகாரி, அதே போல் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க துணைத் தலைவர். இதோ இப்போது டொனால்ட் ட்ரம்பை நேருக்கு நேர் தேர்தலில் சந்திக்கும் முதல் அமெரிக்க பெண் அதிபர் போட்டியாளரும் இவரே. கலிபோர்னியாவின் ஆக்லாண்டில் பிறந்தவர் கமலா ஹாரீஸ். அவரது தாயார், ஷியாமளா கோபாலன். ஒரு தமிழ் இந்திய உயிரியலாளர். மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக 1958ல் 19 வயது மாணவியாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கால்பதித்தவர். அப்பா டொனால்ட் ஜே. ஹாரீஸ் பிரிட்டிஷ் ஜமைக்காவில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவில் செட்டில் ஆனவர்.
கமலா தேவி ஹாரிஸ் 20 அக்டோபர் 1964 அன்று அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் பிறந்தார். அவரது தந்தை டொனால்ட் ஹாரிஸ் ஜமைக்காவை சேர்ந்தவர். இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றுகிறார். கமலா ஹாரிஸின் தாய் வழி தாத்தாவான பி.வி கோபாலன் இந்தியாவை சேர்ந்தவர். கமலா ஹாரிஸும் அவருடைய தங்கை மாயாவும் வளர்ந்து வந்த காலங்களில் இந்து கோயில்கள் மற்றும் கருப்பர்களுக்கான தேவாலயம் இரண்டிற்குமே சென்று வந்தனர். கமலா ஹாரிஸிற்கு ஏழு வயதாக இருந்தபோது அவருடைய பெற்றோர்கள் இருவரும் பிரிந்தனர். குழந்தைகள் இருவரும் அம்மாவின் வளர்ப்பில் இருந்ததால் அவர்கள் இருவரும் தங்கள் தாயுடன் கனடாவின் கியூபெக்கில் உள்ள மாண்ட்ரீலுக்கு குடிபெயர்ந்தனர். ஹாரிஸ் கியூபெக்கிலுள்ள வெஸ்மவுண்ட் உயர்நிலை பள்ளியில் பயின்றார். அதன் பின்னர் மேற்படிப்பை ஹோவார்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு அவர் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் தேர்ச்சி பெற்றார்.
கமலா ஹாரிஸ் 1990 முதல் 1998 வரை கலிபோர்னியாவில் உள்ள அலமேடா கவுண்டியில் துணை மாவட்ட வழக்கறிஞராக பணியாற்றினார். பணியில் இருந்த போது கொள்ளை, கொலை மற்றும் சிறுவர் கற்பழிப்பு தொடர்பான வழக்குகளை இவர் விசாரித்தார். 1990களின் பிற்பகுதியில் அவர் சான்பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் சான்பிரான்சிஸ்கோவின் நகர வழக்கறிஞரான லூயிஸ் ரென்னே என்பவரால் சமூக மற்றும் சுற்றுப்புற பிரிவின் தலைவர் பதவிக்கு கமலா ஹாரிஸ் நியமிக்கப்பட்டார். 2003-ஆம் ஆண்டு நடந்த பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞர் தேர்தலில் தனக்கு எதிராக நின்ற ஹாரிஸ் டெரன்ஸ் என்பவரை தோற்கடித்து கமலா ஹாரிஸ் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞரானார். இந்த பதவிக்கு வந்த முதல் தெற்காசிய மற்றும் கறுப்பின பெண்ணாக கமலா ஹாரிஸ் பார்க்கப்படுகிறார்.
இவர் நவம்பர் 2007-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் நகர வழக்கறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு ஜூரிஸ் டாக்டராக அவர் முதன் முதலாக போதைப் பொருள் கடத்துபவர்கள் உயர்நிலை கல்வி மற்றும் டிப்ளமோ படிக்கவும், வேலை தேடவும் வாய்ப்புகளை உருவாக்கினார். 2009 ஆம் ஆண்டில் கமலா ஹாரிஸ் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். “ஸ்மார்ட் ஆன் க்ரைம்: எ கேரியர் ப்ரோசெக்டூர்ஸ் ப்ளான் டூ மேக் அஸ் சேஃபர்” என்கிற அந்த புத்தகத்தில் அவர் குற்றவியல் நீதியை ஒரு பொருளாதார கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்திருந்தார். இவர் கலிபோர்னியா மாவட்ட வழக்கறிஞர் சங்கம் மற்றும் தேசிய வழக்கறிஞர் சங்கம் ஆகியவற்றில் 2012 களில் வெவ்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். 2010 ஆம் ஆண்டு நடந்த கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் தேர்தலில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த தேர்தலில் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மாவட்ட வழக்கறிஞரான ஸ்டீவ் கூலியை எதிர்கொண்டார். அதில் கமலா ஹாரிஸே வெற்றி பெற்றார்.
ஜனவரி 03, 2011 அன்று அவர் அட்டர்னி ஜெனரலாக பதவியேற்றார். அவர் முதல் ஜமைக்கா அமெரிக்க பெண்மணி மற்றும் கலிபோர்னியாவின் முதல் இந்திய அமெரிக்க அட்டர்னி ஜெனரலாக பார்க்கப்பட்டார். அதன் பிறகு 2014 நவம்பர் அன்று நடந்த தேர்தலில் இவர் ரொனால்ட் கோல்டுக்கு எதிராக போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். அதன் பின்பு 2016 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடந்த அமெரிக்க செனட் தேர்தலில் கமலா ஹாரிஸ் 62 சதவீத வாக்குகளை பெற்று லோரெட்டா சான்செஸை தோற்கடித்தார். 03 ஜனவரி 2017 அன்று இவர் அமெரிக்காவின் செனட்டராக பதவியேற்றார். அதன் பின்பு தனது அரசியல் வாழ்க்கையில் உச்சத்தை அடைந்தார். 11 ஆகஸ்ட் 2020 அன்று நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக ஜோ பிடன் என்பவர் தேர்தலில் நின்றார். அவர் துணை அதிபராக கமலா ஹாரிஸை அறிவித்தார். இதன் மூலம் அவர் ஒரு பெரிய கட்சியின் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் கறுப்பின பெண் என்கிற பெருமையை பெற்றார். 2021 ஜனவரி 20 ஆம் தேதி ஜோ பைடனுடன் சேர்ந்து இவர் பதவி ஏற்றார். தற்போது 2024ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் முதல் பெண் போட்டியாளராக டொனால்ட் ட்ரம்பை சந்திக்கிறார். ஜெயித்தாரா இல்லையா என்பது அரசியல். ஆனால் ஒரு பெண் அதுவும் இந்தியப் பூர்வீகத்தைக் கொண்ட ஒரு பெண் அமெரிக்கத் தேர்தலில் கெத்துக் காட்டினார் என்பது தற்போது மாற்ற முடியாத வரலாறு.
– கவின்
The post உலகையே திரும்பி பார்க்க வைத்த அந்த ஒரு பெண்! appeared first on Dinakaran.