உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை!

5 hours ago 2

தமிழ்நாடு ஒரு ஆன்மிக பூமி. இங்கு எந்த ஊருக்கு சென்றாலும் கோவில்கள் உண்டு. எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் தமிழ் கடவுளாக மக்கள் தங்கள் இதயத்தில் வைத்து வணங்குவது அறுபடை வீடுகளில் குடி கொண்டிருக்கும் முருகப்பெருமான் தான். முருகப்பெருமான் தமிழ் மண்ணோடு தொன்று தொட்டு பிணைந்த கடவுள் என்பதோடு மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியங்களில் முதன்மை இடத்தை பெற்று இருப்பதால்தான், அவர் 'தமிழ் கடவுள்' என்று பூஜிக்கப்படுகிறார். முருகப்பெருமான் தமிழ் மக்களின் இதயத்தில் என்றென்றும் வாழும் கடவுளாகும். இவர் சுப்பிரமணியன், கார்த்திகேயன், சண்முகன், வேலன், குமரன் என்று 108 பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

முருகப்பெருமான் படை, கலை, ஞானம் மற்றும் வீரத்தின் கடவுளாவார். முருகனின் அருள் சின்னங்களான வேல் அஞ்சா நெஞ்சத்தின் சின்னமாகவும், மயில் வாகனம் அழகின் சின்னமாகவும், சேவல் கொடி வீரத்தின் அடையாளமாகவும் போற்றப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பரிபாடல், அகநானூறு, புறநானூறு, கலித்தொகையில் முருகன் பற்றிய நேரடி குறிப்புகள் இருக்கின்றன. வடமொழி நூல்களில் முருகன், 'ஸ்கந்தனாக' காட்டப்படுகிறார். அத்தகைய முருகனுக்கு அறுபடை வீடுகளில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் என்றில்லாமல் வேறு வேறு பெயர்களில் இந்தியா முழுவதும் ஏன் மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் கோவில்கள் இருக்கின்றன.

மலேசியா செல்பவர்கள் கோலாலம்பூரில் உள்ள பத்து மலை முருகன் கோவிலுக்கு செல்லாமல் திரும்புவதில்லை. அந்த கோவிலின் படி ஏறுவதற்கு முன்னால் 140 அடி உயர தங்க நிற முருகன் சிலை பக்தர்களுக்கு அருள்பாலிக்கும். அதைவிட பெரிய முருகன் சிலை சேலம் மாவட்டத்தில் உள்ள ஏத்தாப்பூரில் 146 அடி உயரத்தில் நிறுவப்பட்டபோது பக்தர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். இப்போது சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து பேசும்போது, அமைச்சர் சேகர்பாபு 210 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 85, 86, 87-ம் அறிவிப்புகளை வெளியிடும்போது முருக பக்தர்கள் மனங்கள் கொண்டாடியது.

கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் அறுங்கோண வடிவத்தில் அமைக்கப்படும் புல்வெளி நில அமைவிற்கு மத்தியில் 184 அடி உயர முருகன் சிலை நிறுவப்படும். இதுதான் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலையாக இருக்கும் என்று அறிவித்தார்.

இந்த சிலை மட்டுமல்லாமல் ஈரோடு மாவட்டம் திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில் 160 அடி உயர முருகன் சிலை, ராணிப்பேட்டை மாவட்டம் குமரகிரி திமிரி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 114 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தது முருக பக்தர்களை மனம் நெகிழ வைத்துவிட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தி முருகனுக்கு சேர்த்த பெருமையை விட இப்போது வானுயர்ந்து நிற்கும் 3 முருகன் சிலை நிறுவப்படும் என்று சட்டசபையிலேயே வெளியிட்ட அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த 3 சிலைகளும் பக்தர்களை நாடு முழுவதிலும் இருந்து ஏன் வெளிநாடுகளிலும் இருந்தும் ஈர்த்து தமிழ்நாட்டுக்கு புகழ் சேர்க்கும். மேலும் ஆன்மிக சுற்றுலாவையும் வளர்ச்சியடைய செய்யும். 

Read Entire Article