உலகின் பணக்கார அரசியல்வாதி... 700 கார்களுக்கு சொந்தக்காரர்; யார் இவர்?

3 weeks ago 6

மாஸ்கோ,

உலக அளவில் கோடீசுவரராக உள்ள அரசியல்வாதி யார்? என்பது பற்றிய தகவல் பலராலும் ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது. ஆனால், இவர் இந்தியாவை சேர்ந்த நபர் அல்ல. அரச குடும்ப உறுப்பினராகவும் அவர் இல்லை. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை சேர்ந்தவரும் இல்லை. அப்படி என்றால் அவர் எந்த நாட்டை சேர்ந்த அரசியல்வாதி என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

ரஷிய அதிபராக பதவி வகித்து வரும் விளாடிமிர் புதினே அந்த அரசியல்வாதியாக அறியப்படுகிறார். புதினின் அதிகாரப்பூர்வ சொத்துகள் என 800 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று, லாரி ஒன்று, 3 கார்கள் உள்ளன என கூறப்படுகிறது. இவருடைய ஆண்டு வருமானம் ரூ.1.18 கோடி (1,40,000 அமெரிக்க டாலர்) என அவரே கூறுகிறார். ஆனால், இதற்கும் அவருடைய சொத்து மதிப்புக்கும் தொடர்பே இல்லாதது போல் காணப்படுகிறது.

அவருடைய சொத்து, ரூ.16 லட்சத்து 81 ஆயிரத்து 388 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. 1990-ம் ஆண்டில் மிக பெரிய முதலீட்டாளராக இருந்த பில் பிரவுடர் இதனை கூறுகிறார். 2017-ம் ஆண்டில் அமெரிக்க செனட் சபையின் முன் பிரவுடர் இதற்கான சான்றளித்து உள்ளார். புதினின் மொத்த சொத்து மதிப்பு, அவரை பூமியிலுள்ள பணக்காரராக ஆக்கியுள்ளது என நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், உண்மை வேறாக உள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தி பிளாக் சீ என்ற பெயரிலான பெரிய பங்களாவானது, புதினின் சொத்துக்கான அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதில், ஆடம்பர வசதிகள் பல உள்ளன. கிரேக்க கடவுள்களின் சிலைகளுடன் கூடிய சலவைக்கல்லால் செய்யப்பட்ட நீச்சல் குளம் மற்றும் நவீன திரையரங்கம், ஐஸ் ஆக்கி போட்டியை விளையாடுவதற்கான மூடப்பட்ட பகுதி, பணம் கட்டி விளையாட கூடிய கேசினோ அரங்கம் மற்றும் இரவு விடுதி ஆகியவை இந்த பங்களாவுக்குள் உள்ளன.

பங்களாவின் உட்பகுதி ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. உணவருந்தும் அறையின் மேஜை, நாற்காலிகள் உள்ளிட்டவற்றின் மதிப்பு ரூ.4 கோடியே 20 லட்சத்து 34 ஆயிரத்து 715 (5 லட்சம் அமெரிக்க டாலர்) மற்றும் குளியலறைகளில் இத்தாலி நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட ரூ.71 ஆயிரம் மதிப்பிலான பிரஷ்களே பயன்படுத்தப்படும்.

இந்த ஆடம்பர பங்களாவை ஆண்டுக்கு ரூ.16.81 கோடி செலவில் 40 பணியாளர்கள் இணைந்து பராமரிக்கின்றனர். இதுபோக புதினுக்கு வேறு 19 வீடுகளும் உள்ளன. 700 கார்கள், 58 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் உள்ளன. தவிர, தி பிளையிங் கிரெம்ளின் என்ற பெயரிடப்பட்ட ரூ.6,019 கோடி மதிப்பிலான விமானம் ஒன்றும் இவரிடம் உள்ளது.

இதேபோன்று, ரூ.5,884 கோடி மதிப்பிலான, பந்தயம் அல்லது சுற்றுலா செல்வதற்கு வசதியான ஒரு பெரிய ஆடம்பர ரக படகு ஒன்றையும் வைத்திருக்கிறார். புதினின் செல்வ வளத்திற்கு அடிப்படையாக அவரிடம் பல ஆடம்பர ரக கைக்கடிகாரங்களும் உள்ளன. இவற்றில் ஒரு கைக்கடிகாரத்தின் மதிப்பு, அவருடைய ஆண்டு சம்பளத்தின் 6 மடங்காக உள்ளது என்றால் கணக்கிட்டு கொள்ளுங்கள்.

இந்த தகவல்கள் பரவலாக கூறப்பட்டு வந்த போதிலும், புதினின் மறைக்கப்பட்ட இந்த சொத்துகள் பற்றிய நிச்சயிக்கப்பட்ட சான்றுகள் எதுவும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இதனால், அவரின் அதிகாரப்பூர்வ சொத்துகளே தொடர்ந்து அவருடைய சொத்துகளாக பார்க்கப்படுகின்றன. உக்ரைனுக்கு எதிராக ரஷிய அதிபர் புதின் கடந்த 2022-ம் ஆண்டு போரை தொடங்கினார். இதில், இருதரப்பிலும் தொடர்ந்து பலர் பலியாகி வருகின்றனர். என்றபோதும் போரானது 2 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Read Entire Article