நன்றி குங்குமம் தோழி
உணவு மற்றும் பயணம் சம்பந்தமான ‘டேஸ்ட் அட்லஸ்’ என்ற தளம் உலகின் தலைசிறந்த 10 காபி வகைகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. தரம், சுவை மற்றும் தனித்துவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயாராகியுள்ளது. இதில் இரண்டாம் இடத்தை இந்தியாவின் ஃபில்டர் காபி பிடித்துள்ளதுதான் ஹைலைட். முதல் இடத்தில் கியூபாவின் கியூபன் எக்ஸ்பிரஸ்ஸோ என்ற காபி உள்ளது. மூன்றாம் இடத்தில் கிரீஸ் நாட்டின் எக்ஸ்பிரஸ்ஸோ ஃபிரெட்டோவும், நான்காம் இடத்தில் கிரீஸின் ஃப்ரெட்டோ காப்போசினோவும் உள்ளன. ஐந்து முதல் பத்து இடங்களில் இத்தாலியின் காப்போசினோ, துருக்கியின் டர்கீஷ் காபி, இத்தாலியின் ரிஸ்டிரெட்டோ, கிரீஸின் ஃப்ராப்பே, ஜெர்மனியின் இஸ்காப்பி, வியட்நாமின் வியட்நாமிஸ் ஐஸ் காப்பிகள் உள்ளன.
எவரெஸ்ட்டில் கால் பதித்த 59 வயதுப் பெண்!
எவரெஸ்ட்டின் தெற்கு பேஸ் கேம்பில் கால் பதிப்பது என்பது ஒவ்வொரு மலையேற்ற வீரர், வீராங்கனையின் கனவு. முறையான மலையேற்ற பயிற்சிகள் இல்லாத வசந்தி என்பவர், தெற்கு பேஸ் கேம்பில் கால் பதித்து வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். யூடியூப் வீடியோக்களைப் பார்த்து மலையேற்றம் குறித்தும், மலையேற்றம் செய்பவர்கள் என்ன உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து அறிந்துகொண்டிருக்கிறார்.
கடல் மட்டத்திலிருந்து 17,598 அடி உயரத்திலிருக்கிறது இந்த பேஸ் கேம்ப். மலையேற்றத்துக்கான பிரத்யேக ஆடையின் மேல் கேரளாவின் பாரம்பரிய சேலையை அணிந்து கொண்டு, தெற்கு பேஸ் கேம்பில் தேசியக் கொடியை பிடித்தவாறு நின்று கொண்டிருக்கும் வசந்தியின் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரல். கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள தளிபரம்பா எனும் ஊரில் பிறந்து, வளர்ந்த வசந்தி, டெய்லர் வேலை செய்து வருகிறார்.
இந்தியாவின் கிரேட்டா தன்பர்க்
உலகளவில் குறிப்பிடத்தக்க இளம் சூழலியல் போராளிகளில் ஒருவர், லிசிபிரியா கங்குஜம். ஆறு வருடங்களுக்கு முன் ஸ்பெயினில் நடந்த ஐக்கிய நாடுகளின் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட இளம் போராளி. இவர் அப்துல் கலாமின் சில்ட்ரன்ஸ் விருது, உலக சில்ட்ரன்’ஸ் அமைதிக்கான விருது, நோபல் சிட்டிசன் விருது, ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் இந்தியாவின் சிறந்த 30 வயதுக்குட்பட்ட 30 நபர்களின் பட்டியலில் இடம், டெல்லி அரசின் சர்வதேச மகளிர் தின விருது என லிசிபிரியா கங்குஜத்தின் சிறப்புகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
மணிப்பூரில் பிறந்த லிசிபிரியா, ஆறு வயதிலேயே பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கைச் சீற்றங்களுக்குப் பின்னணியில் இருக்கும் மனிதச் செயல்பாடுகள் குறித்து பொதுவெளியில் பேச ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் தாஜ்மஹாலைச் சுற்றியிருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி வைரலாகியிருக்கிறார். லிசிபிரியாவை இந்தியாவின் கிரேட்டா தன்பர்க் என்று புகழ்ந்து வருகின்றனர்.
வைரல் பெண்!
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகள், அம்மா, பாட்டியுடன் ஊபரில் கார் புக் செய்து பயணம் செய்து கொண்டிருந்தார். காரை ஓட்டிக்கொண்டிருக்கும் போதே, திடீரென்று டிரைவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. காரிலேயே டிரைவரை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு, காரை ஓட்டியிருக்கிறார் அந்தப் பெண். அவரது மனிதாபிமானச் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மைதானம் அமைக்க நிலம் கொடுத்த பாட்டி!
ஒடிசா மாநிலத்திலுள்ள நுவாபடா மாவட்டத்தில் அமைந்திருக்கும் கிராமம், சிங்ஜார். கடந்த ஐம்பது வருடங்களாக இங்கு பலவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு வருடமும் மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கோப்பை கிரிக்கெட் போட்டியை சிங்ஜார் கிராமம் நடத்துகிறது. ராஜ்பூர், பிலாஸ்பூர், கட்டாக், புவனேஸ்வர் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிக்கெட் அணிகள் எல்லாம் புத்தராஜா கோப்பையை கைப்பற்ற விளையாடும்.
கிரிக்கெட் மட்டுமல்ல, கால்பந்து மற்றும் கபடி போட்டிகளையும் கிராமத்தினர் நடத்துகின்றனர். ஆனால், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கும், கிராமத்தினர் விளையாடுவதற்கும் உகந்த வகையிலான மைதானம் அங்கே இல்லை. அதனால் பணம் செலுத்தி தனியாருக்குச் சொந்தமான மைதானத்தில் போட்டிகளை நடத்தி வருகின்றனர். விளையாட்டு மைதானம் என்பது சிங்ஜார் இளைஞர்களின் கனவு. இந்நிலையில் சிங்ஜாரில் விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்காக 5 ஏக்கர் நிலம் கிடைத்துள்ளது. அதனை சிங்ஜார் கிராமத்தைச் சேர்ந்த சபித்ரி மஜ்ஹி என்ற 95 வயது பாட்டிதான் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
த.சக்திவேல்
The post உலகின் சிறந்த காபி appeared first on Dinakaran.