உலகின் ஒவ்வொரு தலைவரிடமும் பேச முடியும்: பிரதமர் மோடிக்கு சிலி அதிபர் புகழாரம்

1 day ago 1

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் அழைப்பையேற்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ள சிலி அதிபர் கேப்ரியெல் போரிச் பான்ட், ஜனாதிபதி மாளிகையில் உரையாற்றினார். அப்போது, பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவ திறன்களை பாராட்டி பேசினார்.

அவர் பேசும்போது, பிரதமர் மோடி, நீங்கள் தற்போது உலகின் ஒவ்வொரு தலைவரிடமும் பேச முடியும் என்ற அந்தஸ்து பெற்றுள்ளீர்கள். நீங்கள் டிரம்ப், ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய யூனியன் அமைப்பை ஆதரிக்கிறீர்கள். கிரீஸ் நாட்டில் உள்ள லத்தீன் அமெரிக்க தலைவர்கள் அல்லது ஈரான் தலைவர்களுக்கும் ஆதரவு தெரிவிக்கிறீர்கள்.

வேறு எந்த தலைவராலும் இதுபோன்று செயல்பட முடியாது. அதனால், புவிஅரசியல் சூழலில் தற்போது முக்கிய தலைவராக மாறியிருக்கிறீர்கள் என கூறியுள்ளார். அவர் தொடர்ந்து, முதன்முறையாக இந்தியாவுக்கு நான் வருகை தந்துள்ளேன். சிறந்த முறையில் இந்தியா என்னை வரவேற்றுள்ளது என தன்னுடைய நன்றியை அப்போது தெரிவித்து கொண்டார்.

சிலியில் இருந்து 16 ஆண்டுகளாக ஒருவரும் இந்தியாவுக்கு வரவில்லை. இந்த 16 ஆண்டுகளில் இந்தியா நிறைய மாறி விட்டது என்றும் கூறியுள்ளார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் போரிச் உடன் பிரதமர் மோடி நேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஜனாதிபதி மாளிகையில், சிலி அதிபர் போரிச் மற்றும் அவருடைய குழுவினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று விருந்தளித்து கவுரப்படுத்தினார். இதனை தொடர்ந்து, இரு நாடுகளிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டன.

சிலி நாட்டின் அதிபர் போரிச், ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து 5 நாட்களுக்கு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு ஆதரவளிப்பது பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்காக நேற்று டெல்லி விமான படை தளத்திற்கு வருகை தந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், வர்த்தக அமைப்புகள், ஊடகம் மற்றும் இந்தியா-சிலி நாடுகளுக்கான கலாசார பிணைப்புடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது.

அவருடைய இந்த பயணம், இருதரப்பு உறவுகளில் தலைவர்கள் ஒரு விரிவான மறுஆய்வு மேற்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். அதனுடன், மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்களில் பரஸ்பர நலன் பற்றி ஆலோசனை மேற்கொள்ளவும் ஏதுவாகும் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர், புதுடெல்லி தவிர, ஆக்ரா, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கும் பயணம் மேற்கொள்வார். இதன்பின்னர், ஏப்ரல் 5-ந்தேதி சிலிக்கு திரும்புவார்.

Read Entire Article