உலக நன்றி தெரிவிக்கும் தினத்தையொட்டி போலீசாருக்கு நன்றி தெரிவித்த பள்ளி மாணவ, மாணவிகள்

2 hours ago 2

*வாழ்த்து அட்டை வழங்கி அசத்தல்

முசிறி : முசிறி காவல் நிலையத்தில் போலீசாருக்கு நன்றி தெரிவித்த பள்ளி மாணவ-மாணவிகள் தாங்களே தயாரித்த வாழ்த்து அட்டைகளை போலீசாருக்கு வழங்கி அசத்தினர்.
திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் போலீசாரை சந்தித்த பள்ளி மாணவ மாணவிகள் அவர்களுக்கு உலக நன்றி தெரிவிக்கும் நாளை முன்னிட்டு தாங்கள் தயாரித்த வாழ்த்து அட்டைகளை வழங்கி நன்றி தெரிவித்தனர்.

உலகில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதும் ஒருவருக்கொருவர் உதவுவதும் தொன்று தொட்ட பழக்கமாக உள்ளது.அதே போல உதவி பெறுபவர் உதவி செய்பவருக்கு நன்றி தெரிவிப்பது நாகரீகமாக கருதப்படுகிறது. அந்த வகையில் உலக நன்றி தெரிவிக்கும் நாளாக நேற்றைய தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த தினத்தை கொண்டாடும் விதமாக முசிறி எஸ்.பி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ-மாணவிகள் முசிறி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கு நேற்று பள்ளியின் தாளாளர் சம்சுதீன் சேட் மற்றும் தலைமை ஆசிரியர் கபில் ராஜா, இளையராஜா ஆகியோருடன் வருகை தந்தனர். காவல் நிலையத்தில் பணியிலிருந்த எஸ்ஐ பிரகாஷ், சுஜாதா மற்றும் சக போலீசாருக்கு தாங்களே தயாரித்த வாழ்த்து அட்டைகளை வழங்கி தங்களுக்கு பாதுகாப்பு வழங்கி அச்சமின்றி வாழ்வதற்கு உதவுவதற்கு நன்றி தெரிவித்தனர்.

வாழ்த்து அட்டைகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட போலீசார் பதிலுக்கு மாணவ-மாணவிகளுக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் காவல் நிலையத்தை சுற்றிப் பார்த்த மாணவ-மாணவிகள் போலீசாரின் அன்றாட பணிகளை கேட்டறிந்தனர்.

போலீசார் மாணவ-மாணவிகள் நல்ல பழக்கவழக்கங்களுடன் வளர்ந்து நன்கு படிக்க வேண்டும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுரை கூறினர்.மாணவ மாணவிகள் காவல் நிலையத்திற்கு வந்து போலீசாருக்கு நன்றி தெரிவித்த நிகழ்வு போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post உலக நன்றி தெரிவிக்கும் தினத்தையொட்டி போலீசாருக்கு நன்றி தெரிவித்த பள்ளி மாணவ, மாணவிகள் appeared first on Dinakaran.

Read Entire Article