சீர்காழி: மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி வழக்கறிஞர் சுதா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளார். இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ், இதன் மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இதில் அவருக்கு உரிய முறையில் கவுரவம் அளிக்க வேண்டும்.
இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை ரூ.11 கோடியில், ரூ.4 கோடி வரியாக செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு, விளையாட்டு வீரர்களுக்கு வரிசலுகை வழங்கியதுபோல், உலக கிராண்ட் மாஸ்டர் குகேசுக்கும் வரிசலுகை வழங்கினால் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதாக அமையும். தமிழ்நாடு அரசு, குகேஷின் சாதனையை கவுரவிக்கும் வகையில் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. அதேபோல் ஒன்றிய அரசும் பரிசுத்தொகை அறிவிக்க வேண்டும். நடப்பு குளிர் கால கூட்ட தொடரில் குகேஷின் சாதனையை பாராட்டி தீர்மானம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The post உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் பரிசு தொகைக்கு ரூ.4 கோடி வரி போடுவதா? சலுகை அளிக்க பிரதமருக்கு எம்பி சுதா கடிதம் appeared first on Dinakaran.