சென்னை,
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 14 சுற்றுகள் முடிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 7½-6½ என்ற புள்ளி கணக்கில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இதன் மூலம் சென்னையை சேர்ந்த 18 வயதான குகேஷ் உலக சாம்பியன் பட்டத்தை குறைந்த வயதில் வென்ற வீரர் என்ற வரலாறு படைத்தார். அத்துடன் இந்த பட்டத்தை வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதனை தொடர்ந்து உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது குகேஷுக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷுக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில், செஸ் வீரர் குகேஷ் மற்றும் அவரது பெற்றோருக்கு பொன்னாடை அணிவித்து கவர்னர் ஆர்.என்.ரவி கவுரவித்தார். இந்த விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, இளம் வயதில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ், 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று தெரிவித்தார்.