உறையூர் கோயிலில் இன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள்- கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை: திரளான பக்தர்கள் தரிசனம்

1 week ago 6

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பங்குனித்தேர் திருவிழாவையொட்டி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் நம்பெருமாள்-கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித்தேர் திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் சித்திரை வீதிகளில் வீதியுலா நடந்தது. 3ம் திருநாளில் நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று முன்தினம் நம்பெருமாள் தங்க கருட சேவை நடந்தது. நேற்று காலை நம்பெருாள் சேஷ வாகனத்திலும், இரவு கற்பக விருட்ச வாகனத்திலும் வீதியுலா நடந்தது.

உறையூர் நாச்சியார் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் சார்பு கோயில் ஆகும். இந்த கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை நாச்சியாரின் ஜென்ம நட்சத்திரமான பங்குனி ஆயில்யம் நட்சத்திரத்தன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள், உறையூர் நாச்சியாருடன் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு சேர்த்தி சேவையில் காட்சியளிப்பார். அதன்படி இந்தாண்டுக்கான நம்பெருமாள்-கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை இன்று(8ம் தேதி) நடந்தது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு தங்க பல்லக்கில் புறப்பட்டு காவிரி ஆற்றை கடந்து வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11 மணியளவில் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் மகாஜன உபய மண்டபத்தை சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாச்சியார் கோயில் முன் மண்டபத்தை பகல் 12 மணியளவில் சென்றடைந்தார்.

பின்னர் முன் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சேர்த்தி மண்டபத்திற்கு மதியம் 1.15 மணிக்கு சென்றார். நம்பெருமாள் -கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை மதியம் 2 மணிக்கு துவங்கியது. இரவு 12 மணி வரை நடைபெறுகிறது. இந்த சேர்த்தி சேவையை காண வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சேர்த்தி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் நாளை அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீரங்கம் வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையை வந்தடைகிறார். 9ம் தேதி உபய நாச்சியார்களுடன் நெல் அளவு வைபவம் நடக்கிறது. 10ம் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் 12ம் தேதி காலை நடைபெறுகிறது. 13ம் தேதி இரவு ஆளும் பல்லக்குடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

The post உறையூர் கோயிலில் இன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள்- கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article