சென்னை: தமிழக சட்ட பேரவையில் நேற்று எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்ைக மீதான விவாதத்தில் கலந்து கொண்டு வேளச்சேரி அசன் மவுலானா (காங்கிரஸ்) பேசியதாவது: மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். எனது தொகுதியில் உள்ள மீனவ கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. தாங்கள் 100 ஆண்டுகளாக இங்கே வசிப்பதால் தங்கள் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்க வேண்டும், என அவர்கள் வலியுறுத்துகின்றனர். அமைச்சர் பி.கே.சேகர்பாபு: அறநிலைய துறை இடத்தில் வசிப்பவர்களுக்கு மின்சாரம் வழங்குவது என்றால், ஒன்று அவர்கள் திருக்கோயிலின் வாடகைதாரர்களாக இருந்து, வாடகை ஏதும் நிலுவையில்லை என்றால், மின் இணைப்பு வழங்கப்படும். அப்படியே மின்சாரம் வழங்கப்பட்டாலும், குடியிருப்பவர்களின் பெயரில் மின்சாரம் வழங்க முடியாது.
இதுகுறித்து நீதிமன்றத் தீர்ப்பும் இருக்கிறது. அவர்களுக்கு மின்சாரம் வேண்டுமென்றால், வாடகைதாரர்களாக திருக்கோயிலுக்கு வரச்சொல்லுங்கள். அந்த வாடகையில் ஏதாவது சலுகை காட்ட சொல்லி, மின்சாரம் நிச்சயமாக வழங்கப்படும். ஆனால், திருக்கோயில் பெயரில்தான் வழங்கப்படும். அமைச்சர் செந்தில்பாலாஜி: மின்சார வாரியத்திற்கென்று சில விதிமுறைகள் உண்டு. அதன்படி தான் மின் இணைப்புகள் வழங்க முடியும். இருந்த போதும், வனப்பகுதி, நீர்நிலைகள், மேய்கால் புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு மின் இணைப்பு கேட்டு கோரிக்கைகள் இருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில், 27 லட்சம் மின் இணைப்பு விண்ணப்பித்தவர்களுக்கு முழுமையாக மின் இணைப்பு வழங்கப்பட்டு, மின்சாரம் வாரியம் சாதனை படைத்துள்ளது. உறுப்பினர் சுட்டி காட்டும் பகுதி, உரிய ஆவணங்களோடு விண்ணப்பிக்கும் பட்சத்தில் 3 நாட்களுக்குள் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அசன் மவுலானா: இந்தாண்டு இதுவரை மின்தடை என இதுவரை தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை. குறைந்த மின் அழுத்தம் என்றும் வரவேயில்லை. இது வரவேற்கதக்கது. மின் உற்பத்தியை இன்னும் அதிகரிக்க புதிய மின் உற்பத்தியை உருவாக்க வேண்டும். அமைச்சர் செந்தில்பாலாஜி: ஒட்டுமொத்த இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் தமிழ்நாடு 3வது இடத்தை வகிக்கிறது. மின் உற்பத்தியில் மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் 2வது இடத்திலிருந்து, அதிகமான மின் உற்பத்தியினை செய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
The post உரிய ஆவணங்களோடு விண்ணப்பித்தால் 3 நாளில் மின் இணைப்பு; 4 ஆண்டுகளில் 27 லட்சம் இணைப்பு வழங்கி மின்சார வாரியம் சாதனை: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் appeared first on Dinakaran.