சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஆருயிர் இளவல் கருணாஸ் தயாரிப்பில், அன்புத்தம்பி கிட்டு இயக்கத்தில், அன்புத்தம்பி சுரேஷ் காமாட்சி வெளியிடவிருக்கும் சல்லியர்கள் எனும் ஆகச்சிறந்த படைப்பு வரும் மார்கழி திங்கள் 17-ம் நாள் (01-01-2025) அன்று வெளியாகவிருக்கிறது என்பதைப் பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
தமிழீழத் தாயகத்தில் போராடிய நமது காவல் தெய்வங்களான விடுதலைப்புலிகள் களத்தில் வீரத்தோடு மட்டும் நிற்கவில்லை; அறத்தோடும் நின்றார்கள். 'எம் மக்களை அழித்தொழிக்கும் சிங்கள இராணுவம்தான் எதிரியே ஒழிய, சிங்கள மக்கள் அல்லர்' எனும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் போதித்த அறநெறிக் கோட்பாட்டை ஏற்று சண்டை செய்தார்கள். போர்மரபுகளையும், ஒழுக்க நெறிகளையும் ஒருநாளும் அவர்கள் மீறியதில்லை. அந்த விடுதலைப் போராட்டக்களத்தில் காயம்பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்றும் உன்னதப் பணியைச் செய்த மருத்துவர்களின் உயிர்மநேயத்தை ஆழமாகப் பதிவுசெய்திருக்கும் பெருங்காவியம்தான், 'சல்லியர்கள்'.
தனது இனத்தின் காப்பரண்களான விடுதலைப்புலிகள் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டுமில்லாது, சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர்களின் உயிரையும் காக்க மருத்துவம் செய்திடும் மாசற்ற மாந்தநேயத்தை திரைமொழியில் பதிவுசெய்து, நெஞ்சைக் கனக்கச் செய்யும் படைப்பாக இத்திரைப்படம் படைக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களின் அறத்தையும், வீரத்தையும் ஒருசேர பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைய உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.