உயிர்களைக் காக்கும் மருத்துவர்களை காக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது - ஓ. பன்னீர்செல்வம்

5 days ago 3

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பொதுமக்களின் வாழ்க்கையில் முக்கியப் பங்கினை வகிக்கும் மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக, புகழ் பெற்ற மருத்துவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியுமான டாக்டர் பி.சி. ராய் அவர்களின் பிறந்த தினமான ஜூலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், அனைத்து மருத்துவர்களுக்கும் எனது இதயபூர்வமான தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆரோக்கியமான நாடாக இந்தியா விளங்குவதற்கு முக்கியக் காரணியாக விளங்குபவர்கள் மருத்துவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மருத்துவர்களின் நிபுணத்துவம், அனுதாபம், கருணை ஆகியவை ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அர்ப்பணிப்பு உணர்வுடனும், மனித நேயத்துடனும் உயிர் காக்கும் மருத்துவப் பணிளை மேற்கொள்பவர்கள் மருத்துவர்கள்.

உயிர்களைக் காக்கும் மருத்துவர்களை காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசாங்கத்திற்கு உண்டு. இந்தக் கடமையை அரசாங்கம் மேற்கொள்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக வெளியிடப்பட்ட பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு அரசாணை எண்.354 இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும், கொரோனா தொற்று நோய் உச்சத்தில் இருந்த நிலையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்களுக்காக பணியாற்றி இறந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படவில்லை என்பதும் மிகுந்த வேதனை அளிக்கிறது. தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

இந்த இனிய நாளில், மருத்துவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் வென்றெடுக்கப்பட வேண்டுமென்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்வதோடு, அனைத்து மருத்துவர்களுக்கும் எனது மனமார்ந்த தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article