உலக அளவில் 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி சாலை விபத்து இறப்புகள் 5 சதவீதம் குறைந்த நிலையில் இந்தியாவில் தான் சாலை விபத்துகள் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து இருந்தது. அதிலும் இந்தியாவில் தமிழகத்தில்தான் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து அதிகரித்து விபத்துகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. காரணம் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகம் இல்லாததும் மற்றும் சாலைவிதிகளை முறையாக நாம் பின்பற்றாததுமே ஆகும். எனவே, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு என்பது நம்முடைய நாட்டிற்கும் நம்முடைய மாநிலத்திற்கும் மிக முக்கியமானதாகும். இதற்கான தீர்வாகத்தான் மாணவர்களிடையே இளம் பிராயத்திலேயே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சாலைப் பாதுகாப்புப் படை (ROAD SAFETY PATROL) என்கின்ற அமைப்பு பள்ளிகளில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்றது.
நாம் ஒவ்வொருவரும் சாலையை ஏதோ ஒரு விதத்தில் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நம் வாழ்வில் கண்டிப்பாகத் தேவையான ஒன்றாகும். அதனை இளம் வயதிலேயே மாணவர்கள் மனதில் பதியவைக்க உதயமானதுதான் சாலை பாதுகாப்பு படை (ROAD SAFETY PATROL – RSP) என்பதாகும். சாலைப் பாதுகாப்புப் படையின் முக்கிய நோக்கம் சாலைப் பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதன் அவசியம், ஒழுக்கம் மற்றும் பள்ளி வளாகத்தில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது குறித்து மாணவர்களுக்கு க் கற்பிப்பது ஆகும். சாலைப் பாதுகாப்புப் படையின் பணி என்பது மனித குலத்திற்கான ஒரு சிறந்த சேவையாகும். இது விபத்து இல்லாத வாழ்க்கையை உறுதி செய்கிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு காவல்துறை அதிகாரியை நியமிக்க முடியாது என்பதால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதேசர் முல்லா என்பவர் 1957 ஆம் ஆண்டில் இதற்கான தீர்வாகப் பள்ளி மாணவர்களின் குழுவிற்கு போக்குவரத்து விதிகள் தொடர்பாகப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். இந்தச் செயல்பாடு உடனடி வெற்றியாக அமைந்தது. மேலும் இது விரைவில் இந்தியாவின் பல மாநிலங்களில் பரவியது. சாலைப் பாதுகாப்புப் படை சென்னை பிரிவு 1982ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் ஒப்புதலுடன் சென்னைப் போக்குவரத்துக் காவலர்கள் அமைப்பினால் பள்ளிகளில் சாலைப் பாதுகாப்புப் படை தொடங்கப்பட்டது.
சாலைப் பாதுகாப்புப் படை கேடட்கள் சமூகத்திற்குச் சாலை பாதுகாப்பு கல்வியை, விழிப்புணர்வைப் பரப்பும் ஊடகமாக இதன் மூலம் செயல்பட்டு வருகின்றனர். மாணவர்கள் சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கற்றுக்கொண்டு தங்கள் பாதுகாப்பிற்காகவும் சக மனிதர்களின் பாதுகாப்பிற்காகவும் பயிற்சி மேற்கொள்கிறார்கள். சாலைப் பாதுகாப்பு விதிகள், சாலை சிக்னல்கள் மற்றும் முதலுதவி நுட்பங்கள் குறித்து தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
சாலைப் பாதுகாப்புப் படையில் பங்கேற்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் சைக்கிள்களை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபடுகின்றனர். பள்ளி முடியும் நேரத்தில் இடைவேளை நேரங்களில் அனைத்து மாணவர்களும் வரிசையில் செல்ல வழி நடத்துகிறார்கள். மேலும் பள்ளியில் முன்புறமுள்ள சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி மாணவர்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல, விபத்து நேராமல் இருக்க உதவுகின்றனர். வாரநாட்களில் பீக் ஹவர்ஸ் எனப்படும் வாகன நெரிசல் மிகுந்த நேரங்களில், விழாக்காலங்களில், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்த சாலைச் சந்திப்பில் காவல்துறையினரோடு கைகோர்த்து மெச்சத்தகுந்த பணியினை இந்தப் படை மாணவர்கள் அனைத்து நகரங்களிலும் செய்துவருகின்றனர்.
சாலைப் பாதுகாப்புப் படையின் குறிக்கோள் (WE LIVE TO SERVE)
சாலைப் பாதுகாப்புப் படையின் நோக்கம் குறிக்கோள் ‘‘நாங்கள் சேவை செய்வதற்காகவே வாழ்கிறோம்” என்பதாகும். சாலைப் பாதுகாப்பு வாரம் (ஜனவரி 11 முதல் 17ஆம் தேதி வரை), சர்வதேச ரத்த தான தினம் (ஜூன் 14), சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினம் (ஜூன் 26), சர்வதேச முதலுதவி தினம் (செப்டம்பர் 2வது ஞாயிற்றுக்கிழமை), தேசிய ரத்ததான தினம்(அக்டோபர் 1), சாலைப் பாதுகாப்பு நாள் (நவம்பர் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை), சர்வதேச தன்னார்வலர்கள் தினம் (டிசம்பர் 17) போன்ற நாட்களில் பொருத்தமான விழிப்புணர்வுச் செயல்பாடுகளை இந்த சாலைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மேற்கொள்கின்றனர்.
மனித உயிர் விலை மதிப்பற்றது. அதனை அற்பமான சாலை விபத்தில் இழந்து விடக்கூடாது. உயிர் காக்கும் இந்த உன்னத விழிப்புணர்வு செயல்பாடுகள் செய்து வரும் சாலைப் பாதுகாப்புப் படையை வலுவாக்குவோம், பலப்படுத்துவோம். விபத்தில்லா தமிழ்நாடு என்கிற உன்னத நிலையை உருவாக்குவோம். பரவலாக அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்தச் சிறப்பு வாய்ந்த படை உருவாக்கப்பட அரசுடன், கல்வித்துறையுடன் கரம் சேர்த்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
The post உயிர் காக்கும் பணியில் சாலைப் பாதுகாப்புப் படை appeared first on Dinakaran.