உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியின் முன்னேற்றம் குறித்து: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

3 hours ago 1

சென்னை: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக “சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இரண்டு அடுக்கு நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியின் முன்னேற்றம் குறித்து”, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (13.3.2025) தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு வருகைப்புரிந்த அலுவலர்களை அமைச்சர் வரவேற்று, ஆய்வுக் கூட்டத்தினை தொடக்கி வைத்து உரையாற்றினார்கள்.

தமிழ்நாட்டில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ் “சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை, இரண்டு அடுக்கு நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலம்” அமைக்கும் பணியானது 21 கி.மீ. நீளத்திற்கு ரூ.5,510 கோடி மதிப்பில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான நில எடுப்பு தமிழ்நாடு அரசு சென்னை துறைமுக ஆணையமும் 50:50 விகித பங்களிப்புடன் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணி 23.11.2023 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில், முதல் அடுக்கு 11 கி.மீ. நீளத்திற்கு நேப்பியர் பாலம் முதல் கோயம்பேடு வரை, 13 நுழைவு மற்றும் வெளி சாய்வுதளத்துடன் மாநகரப் போக்குவரத்தை கையாளும் விதத்திலும், இரண்டாவது அடுக்கு 21 கி.மீ. நீளத்திற்கு சென்னை துறைமுகத்திற்கு வரும் கனரக வாகனங்களை கையாளும் விதத்திலும் அமைக்கப்பட்டு வருகிறது.

இப்பணி நிறைவு பெற்றால், அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து சென்னை துறைமுகத்தை அணுக ஏதுவாக இருப்பதால், துறைமுகத்தின் கையாளும் திறன் அதிகரிக்கும். மேலும், நகரப் போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறையும் என்று அமைச்சர் தெரிவித்தார். இப்பணியை முடிக்க நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தகாலம் 30 மாதங்கள் மட்டுமே உள்ளதால், இப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க, நீர்வளத் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, சென்னை மாநகராட்சி, சென்னை காவல் மாநகர போக்குவரத்துத் துறை, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணிகள் விரைவாக முடிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் இரா.செல்வராஜ் தமிழ்நாடு நகர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநர் அன்சூல் மிஸ்ரா தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அலுவலர் வீரேந்திர சம்யால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் ஜனக்குமரன் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியின் முன்னேற்றம் குறித்து: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article