உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு இலவசப் பயிற்சி

2 months ago 7

நம்நாட்டில் எம்பிபிஎஸ் உட்பட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல், மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் சேரவும் ஜேஇஇ, கிளாட் போன்ற தேர்வுகள் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி அடைவதற்காக மாணவர்கள் தொடர் பயிற்சி பெற வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

அந்த வகையில் நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வழங்கும் பணிகளை மத்திய கல்வி அமைச்சகமும் முன்னெடுத்துள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) சார்பில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கென பிரத்யேக சதீ (sathee) எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்து பயிற்சி பெற்று பயன் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.

இது தவிர க்யூட், கிளாட் போன்ற நுழைவுத்தேர்வுகள், எஸ்எஸ்சி, வங்கிப்பணி போன்ற தேர்வுகளுக்கும் பயிற்சி தரப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் https://sathee.prutor.ai என்ற இணையதளத்துக்கு சென்று எந்தத் தேர்வுகளுக்கு தயாராக வேண்டுமோ அதற்கு முன்பதிவு செய்து இலவசப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம். மேலும், அந்த இணையதளத்தின் கீழ்ப்பகுதியில் நுழைவுத்தேர்வுகளுக்கு இன்னும் எத்தனை நாட்கள், எவ்வளவு நேரங்கள் உள்ளன என்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனக் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

The post உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு இலவசப் பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article