+2 தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே பெரும்பாலான பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இயல்பாகவே ஒரு குழப்பம் தொற்றிக்கொள்ளும். அது உயர்கல்வி குறித்ததுதான். என்ன படிக்க வேண்டும் என்ற குழப்பம் ஒருபுறம் இருக்க எங்கு படிப்பது என்ற குழப்பமும் தவிர்க்கமுடியாதது. இந்தக் குழப்பத்தை தவிர்க்கத்தான் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை (National Assessment and Accreditation Council- NAAC) அல்லது என்ஏஏசி என்பது இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு தரவரிசைப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு வழங்கும் நிதியில் தன்னாட்சியுடன் இயங்கும் இந்த அமைப்பு பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது.
1986ல் இயற்றப்பட்ட தேசிய கல்விக் கொள்கைப் பரிந்துரைக்கு ஏற்ப 1994ஆம் ஆண்டு இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இந்தக் கல்விக்கொள்கையின் நோக்கம் கல்வியின் தரக்குறைபாடுகளை களைவதாகும். 1992ஆம் ஆண்டில் செயலாக்கத் திட்டம் வடிவமைக்கப்பட்டு தனியதிகாரம் கொண்ட தேசிய தரவரிசைப்படுத்தும் அமைப்பொன்றை நிறுவ தொலைநோக்குத் திட்டம் தீட்டப்பட்டது. இதன்படி, என்ஏஏசி 1994ஆம் ஆண்டு பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்கள் அல்லது அதன் அலகுகள் அல்லது குறிப்பிட்ட கல்வித் திட்டங்கள் அல்லது திட்டங்களுக்கு அவ்வப்போது மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் வழங்க ஏற்பாடு செய்தல், உயர்கல்வி நிறுவனங்களில் கற்றல் – கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்துவதற்கான கல்விச்சூழலைத் தூண்டுதல், உயர்கல்வியில் சுய மதிப்பீடு, பொறுப்புக்கூறல், சுயாட்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல், தரம் தொடர்பான ஆராய்ச்சி ஆய்வுகள், ஆலோசனை மற்றும் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்தல் மற்றும் தர மதிப்பீடு, பதவி உயர்வு மற்றும் வாழ்வாதாரத்திற்காக உயர்கல்வியின் மற்ற பங்குதாரர்களுடன் ஒத்துழைத்தல் போன்ற பணிகளை இவ்வமைப்பு செய்துவருகிறது.
தரச்சான்று ஆய்வுமுறை: தரச்சான்று பெற விண்ணப்பிக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மூன்று நிலையிலான செயல்பாடுகள் தேவையானதாக இருக்கின்றன. முதல் நிலையில், விண்ணப்பிக்கும் உயர்கல்வி நிறுவனம் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழுவின் தரப்படுத்தல் விதிமுறைகளைப் பின்பற்றி, தங்கள் நிறுவனத்தைத் தயார்படுத்திக் கொண்டு சுயஆய்வு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இரண்டாம் நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்பதைத் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழுவினால் அமைக்கப்பட்ட இணைக்குழு கல்வி நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வுசெய்து, அதனடிப்படையில் பரிந்துரைகளை வழங்குகிறது. மூன்றாம் நிலையாக, இணைக்குழுவின் பரிந்துரையினை முழுமையாகப் பரிசீலித்து, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழு அமைப்பின் செயற்குழுவானது உயர்கல்வி நிறுவனங்களுக்கான தர மதிப்பீட்டை வழங்குகின்றது.
குழுவின் அறிக்கை, அளவுகோல் அளவீடுகளின் முக்கியத்துவம் மற்றும் நிறுவனத்தின் தரத்தாள் எனும் மூன்று பகுதிகளைக் கொண்ட ஆவணமாக மதிப்பீட்டின் முடிவுகள் தொகுக்கப்படுகின்றன. இம்மூன்றினையும் கொண்டு, தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தின் (Information and Communications Technology – ICT) அடிப்படையில் உயர்கல்வி நிறுவனத்தின் தரச்சான்றுக்கான மதிப்பீடு செய்யப்படுகின்றது. அதன் பிறகு, உயர்கல்வி நிறுவனங்கள் பெற்ற ஒட்டு மொத்தத் தரப்புள்ளி சராசரி (Cumulative Grade Point Average – CGPA) அளவினைக் கொண்டு, உயர் கல்வி நிறுவனத்திற்கான தரச்சான்று ஏழு வகையாக வழங்கப்படுகிறது.
அதன்படி கல்வி நிறுவனங்கள் பற்றிய தர ஆய்வு முடிவில் உயர்கல்வி நிறுவனங்கள் ஆங்கில எழுத்தின் அடிப்படையில் 4 தரங்களில் நிறுவனங்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தரப்படுத்தப்படுகின்றன.
நிறுவனக் கூடுதல் தரப்புள்ளிகள் எழுத்து வகைப்பாடு செயல்பாடு
3.51 – 4.00 A++ தரம் பெற்றது
3.26 – 3.50 A+ தரம் பெற்றது
3.01 – 3.25 A தரம் பெற்றது
2.76 – 3.00 B++ தரம் பெற்றது
2.51 – 2.75 B+ தரம் பெற்றது
2.01 – 2.50 B தரம் பெற்றது
1.51 – 2.00 C தரம் பெற்றது
1.50 D தரம் பெறவில்லை
கடந்த 2023 ஜூன் நிலவரப்படி இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், 820 பல்கலைக்கழகங்களும் 15,501 கல்லூரிகளும் இந்த அவையினால் அங்கீகாரம் பெற்றுள்ளன.
The post உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தேசிய தரச்சான்று வழங்கும் முறை appeared first on Dinakaran.