உயரழுத்த மின் இணைப்பு கட்டணத்தை காசோலையில் பெறக்கூடாது: மின் வாரியம் உத்தரவு

3 months ago 24

சென்னை: உயரழுத்த மின் இணைப்புகளுக்கான கட்டண தொகையை காசோலையில் பெறக் கூடாது என அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின்சார பளுவுக்கு ஏற்ப தாழ்வழுத்த, உயரழுத்த இணைப்புகள் என பிரித்து மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது. 112 கிலோ வாட்டுக்கு மேல் மின் பளு வாங்கினால், அது உயரழுத்த மின்சார இணைப்பு என அழைக்கப்படும். இந்த இணைப்புக்கு மின்மாற்றிகள் மற்றும் மின் தடவாள பொருட்களை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களே வாங்கிக் கொள்ள வேண்டும்.

மின்சாரம் மட்டும் வாரியம் சார்பில் வழங்கப்படும். இதற்கான கட்டணத்தை நுகர்வோர் மாதந்தோறும் செலுத்த வேண்டும். உயரழுத்த இணைப்பை பொறுத்தவரை சராசரி மின் கட்டணத்தின் 2 மடங்கு தொகை நுகர்வோரின் கணக்கில் முன்வைப்பு தொகையாக இருப்பு வைக்க வேண்டும். இந்நிலையில், உயரழுத்த மின் கட்டணத்துக்கான தொகையை வரைவோலை, காசோலையில் பெறக் கூடாது என அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
பெரும்பாலான தாழ்வழுத்த நுகர்வோர் இணையவழியில் கட்டணத்தை செலுத்தும் நிலையில், உயரழுத்த பிரிவில் மின்சாரம் பெறுவோரும் இணையவழியில் கட்டணம் செலுத்த வேண்டும் என மின்வாரியம் வலியுறுத்தியுள்ளது.

மின் கட்டணத்துக்காக பெறும் காசோலைகளை வங்கியில் செலுத்தி, வாரிய வங்கி கணக்கில் பணம் வந்து சேருவதற்கு சில நாட்கள் ஆவதால் காசோலைகளை பெறக் கூடாது எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் வரைவோலைகளையும் தவிர்த்து, இணையவழியில் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்துமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post உயரழுத்த மின் இணைப்பு கட்டணத்தை காசோலையில் பெறக்கூடாது: மின் வாரியம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article