உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகே ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கிய 50 பேரை ராணுவம் மீட்ட நிலையில் 4 பேர் உயிரிழப்பு

3 hours ago 1

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகே ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் உள்ள மானாவில் எல்லைச் சாலைகள் அமைப்பு திட்ட பணிகளின் போது பனிச்சரிவு ஏற்பட்டது. உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் கோயிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) முகாமுக்கு அருகே இந்த பனிச்சரிவு ஏற்பட்டதால் அங்கு சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த வீடுகளும் பனிச்சரிவால் மூடப்பட்டன. பனிச் சரிவில் சிக்கிய 57 பேரில் 32 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

எஞ்சிய 25 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் மேலும் 14 பேர் இன்று மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே, மாநில பேரிடர் மேலாண்மை செயலாளர் வினோத் குமார் சுமன் கூறுகையில், “பிஆர்ஓ முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியிருப்பதாக கூறப்படும் 57 தொழிலாளர்களில் இரண்டு பேர் விடுப்பில் உள்ளனர். உண்மையில் பனிச்சரிவில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 55. பனிச்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஏழு அடிக்கு பனி சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகளை மேற்கொள்வது கொஞ்சம் சிரமமாகவே உள்ளது. என்றாலும், மீட்பு பணிகளில் 65 பேர் ஈடுபட்டுள்ளனர்.” என்றார். இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கியவர்களில் 50 பேரை ராணுவம் மீட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகே ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கிய 50 பேரை ராணுவம் மீட்ட நிலையில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article